அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (11)
எம்.ஜி.ஆரைப் பார்த்து அழுத, சிவாஜி!ஒருநாள் கமலா அம்மாவுடன், என் அம்மா கோதை ஆச்சி, தங்கை கிருஷ்ணா இரண்டு பேரும், ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிவாஜி சற்று தள்ளி உட்கார்ந்து, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, கமலா அம்மாவிடம், 'உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச நடிகர் யாரு?' எனக் கேட்டார், என் அம்மா. சங்கடமான கேள்வியாயிற்றே என, நினைத்தேன். சிவாஜி பெயரை தான் சொல்வார் என, கருதினேன். ஆனால், கமலா அம்மா கொஞ்சம் கூடத் தயங்காமல், 'எம்.ஜி.ஆர்...' என்றார். எனக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது. இந்த பதிலைக் கேட்டு, மெதுவாய் தலையைத் திருப்பி, கமலா அம்மாவைப் பார்த்தார், சிவாஜி. உடனே, கமலா அம்மா, 'மாமா! (சிவாஜியை அவர் எப்போதும் அப்படித்தான் கூப்பிடுவார்) நடிப்புல உங்களுக்குன்னு ஒரு, 'ஸ்டைல்' இருக்குதில்லையா? அதேபோல, எம்.ஜி.ஆருக்குன்னு ஒரு, 'ஸ்டைல்' இருக்கு! 'எனக்கு எம்.ஜி.ஆருடைய நடிப்பு, 'ஸ்டைல்' பிடிக்கும்! அதான் அப்படிச் சொன்னேன். நீங்க தான் நடிகர் திலகம்! அதுல மாற்று கருத்து கிடையாது...' என, விளக்கம் சொன்னார். கமலா அம்மாவின் விளக்கத்தைக் கேட்ட, சிவாஜியின் முகத்தில் லேசான புன்னகை. தலையை மெல்ல அசைத்தார், ஆமோதிப்பது போல். 'பொதுவாக, தமிழ்நாட்டில், எம்.ஜி.ஆர்., ரசிகர்களும், சிவாஜி ரசிகர்களும் மோதிக் கொள்வது வழக்கம். ஒருத்தரை ஒருத்தர் விமர்சனம் செய்வர். தனிப்பட்ட முறையில் உங்களுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே என்ன மாதிரியான உறவு இருந்தது? அதைப் பற்றி சொல்லுங்களேன்...' என, சிவாஜியிடம் கேட்டேன். இந்த கேள்விக்கு காத்திருந்தவர் போல் பதிலளித்தார், சிவாஜி. எம்.ஜி.ஆரைப் பற்றி பேசும் போது, அவர் குரலில் ஒரு நெகிழ்ச்சி இருந்தது. எம்.ஜி.ஆர்., பற்றி நிறைய நேரம் பேசினார். அவர் சொன்னதன் சுருக்கத்தை மட்டும், உங்களுக்கு சொல்கிறேன்... 'நாடக கம்பெனியில நடிச்ச காலத்தில் இருந்தே, நாங்க இரண்டு பேரும் நண்பர்கள். எம்.ஜி.ஆருக்கு சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்துல தான் வீடு. அம்மா மற்றும் அண்ணன் சக்ரபாணியோடு அந்த வீட்டுல இருந்தாங்க. 'நானும், என் கூட நாடக கம்பெனியில் இருந்த, காக்கா ராதாகிருஷ்ணனும் அடிக்கடி, எம்.ஜி.ஆர்., வீட்டுக்குப் போவோம். எம்.ஜி.ஆரின் அம்மா எத்தனையோ நாள், எங்கள் மூணு பேருக்கும் சாப்பாடு போட்டிருக்காங்க. 'எங்களை சினிமாவுக்கு அழைத்து போவார், எம்.ஜி.ஆர்., சினிமா முடிஞ்சு வரும்போது ஹோட்டலுக்கு அழைச்சிக்கிட்டுப் போவார். சினிமாவுல நடிச்ச போதும், அவர் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆன பின்னும், எங்கள் நட்பின் நெருக்கம் குறையவே இல்லை. 'அவரை பலமுறை சந்திச்சுப் பேசி இருக்கேன். நாங்கள் ரெண்டு பேரும் விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறோம். பல விழாக்களில் எனக்கு விருது கொடுத்திருக்கிறார், எம்.ஜி.ஆர்., 'என் அம்மா இறந்த பின், என்னோட தோட்டத்துல அம்மாவுக்கு சிலை வைத்தேன். அதை திறந்து வைத்தது, எம்.ஜி.ஆர்., தான். தஞ்சாவூர்ல, சாந்தி - -கமலா தியேட்டர் கட்டின போது, அதை, 'நான் திறந்து வைக்கிறேன்'ன்னு சொல்லி, தஞ்சாவூருக்கு வந்து திறந்து வைத்தார். 'அவர் உடம்பு சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குப் போன போது, என்னை பார்க்கணும்ன்னு சொன்னார். நானும், கமலாவும் அமெரிக்கா வந்து, ஆஸ்பத்திரில அவரை சந்திச்சுப் பேசினோம். அவர் ரொம்பவும், 'எமோஷனல்' ஆயிட்டாரு. 'எம்.ஜி.ஆரை பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனாலும், உணர்ச்சி வசப்பட்டுட்டேன். என்னால அழுகையை கட்டுப்படுத்த முடியலை. அழுதேன். எப்பவும் அவர் ராமன் போலவும், நான் தம்பி பரதன் போலவும், எனக்கு தோன்றும். 'சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய பின், அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், நானும் கலந்துக்கிட்டேன். வீட்டுக்கு வாங்கன்னு சொன்னார். ஆனால், அடுத்த சில தினங்களிலேயே அவர் மறைந்து விட்டார்...' என, உருக்கமாய் சொன்னார், சிவாஜி. அடுத்து, சிவாஜி சொன்ன விஷயம் முக்கியமானது. அதை சொல்லும் போது, அழுது விட்டார், சிவாஜி. 'எம்.ஜி.ஆர்., இறந்த துக்கம் விசாரிக்க, ராமாவரம் தோட்டத்துக்குப் போனோம். அப்போது, ஜானகி அம்மா, 'சிவாஜியும், கமலாவும் வருவாங்க. அவங்க சாப்பிடறதுக்கு ஆப்பமும், மீன் குழம்பும் செய்து வை'ன்னு சொன்னார். 'ஆனா, நீங்க வர்றதுக்குள்ள அவர் போய்ட்டார்னு வேதனையோடு சொன்னாங்க. ஜானகி அம்மா இப்படி சொன்னதும், என்னால தாங்க முடியல. எம்.ஜி.ஆர்., என் மேல வச்சிருந்த பாசம், என்னை நெகிழப் பண்ணிடுச்சு...' இதை சொன்னபோது, சிவாஜிக்கு கண்கலங்கி, கண்ணீர் வந்து விட்டது. ந டிப்பில் மட்டுமல்ல, உரையாடுவதிலும் மன்னர், சி வாஜி. சளைக்காமல், சலிக்காமல் அவருடன் பேசிக் கொண்டிருக்கலாம். அவரது நடிப்பை போலவே, அவர் உரையாடலும் சுவையானது, சுவாரசியமானது. அமெரிக்காவில் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கும் போது, எல்லாரும் உட்கார்ந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருப்போம். நேரம் போவதே தெரியாது. அவரும் நிறைய பேசுவார். மற்றவர்கள் பேசுவதையும் உன்னிப்பாக கேட்பார். நேரமாகி விட்டது, எனக்கு சோர்வாக இருக்கிறது, துாக்கம் வருகிறது... இப்படி ஏதாவது காரணங்கள் சொல்லி விட்டு, அங்கிருந்து விடைபெற்று, தன் அறைக்குப் போக மாட்டார். எவ்வளவு நேரமானாலும் பேசிக் கொண்டே இருப்பார். எல்லாரும் கிளம்பும் போது தான் கிளம்புவார். அவருடன் நடக்கும் உரையாடல்களில், நான் கவனித்த மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அவருக்கு ஒரு விஷயம் பற்றி தெரியவில்லை என்றாலோ அல்லது அந்த விஷயம் அவருக்கு புரியவில்லை என்றாலோ, எந்த தயக்கமும் இல்லாமல், அதுபற்றி கேட்டுத் தெரிந்து கொள்வார். சந்தேகம் கேட்டால் தன், 'இமேஜ்' பாதிக்கும் என்றோ, தன்னை மட்டமாக நினைப்பர் என்ற நினைப்போ, அவரிடம் கிடையாது. நான் சிவாஜி கணேசன், பெரிய நட்சத்திரம் என்ற எண்ணங்களும் அவருக்கு வராது. எந்த சந்தேகம் இருந்தாலும், வெளிப்படையாக கேட்டு புரிந்து கொள்வார் ; தெரிந்து கொள்வார். அவரது வெற்றிகளுக்கு இதுவும் ஒரு காரணமாக நினைக்கிறேன். பல பிரபலங்களிடம் இல்லாத, நல்ல குணம் இது. சி வாஜியுடன் பேசும் போது, அவராகவே பல விஷயங்கள் குறித்து, ஜாலியாகப் பேசுவார். சிவாஜி சீரியசாக பேசுகிறாரா அல்லது காமெடிக்காக அப்படி பேசுகிறாரா என, சிலசமயம் நமக்கு சந்தேகம் வரும். 'டாக்டர் எனக்கு ஒரு சந்தேகம்...' என, ஆரம்பித்தார், ஒருநாள். 'என்ன சந்தேகம்?' எனக் கேட்டேன். 'பிரான்ஸ் நாட்டுக்காரர்கள் இருவர் சந்தித்து கொண்டால், அவர்களுக்குள் ப்ரெஞ்ச் மொழியில் பேசிக் கொள்கின்றனர். இரண்டு ஜெர்மனி நாட்டுக்காரர்கள் சந்தித்துக் கொண்டால், அவர்களுக்குள் ஜெர்மன் மொழியில் பேசிக் கொள்கின்றனர். 'நம் நாட்டில் எடுத்துக் கொண்டாலும், இரண்டு ஹிந்திக்காரர்கள் பார்த்துக் கொண்டால், அவர்கள் ஹிந்தியில் தான் பேசிக் கொள்கின்றனர். இரண்டு மலையாளிகள் பார்த்துக் கொண்டால், கட்டாயமாக மலையாளத்தில் தான் பேசிக் கொள்கின்றனர்...' என்றவர், சற்றே நிறுத்தினார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது, எனக்கு புரிந்து விட்டது. ஆனாலும், அவரே சொல்லட்டும் என, பேசாமல் இருந்தேன். 'ஆனால் டாக்டர், இரண்டு தமிழர்கள் சந்திக்கும் போது, அவர்கள் தமிழில் பேசிக் கொள்ளாமல், இங்கிலீஷில் பேசிக் கொள்கின்றனரே... ஏன்?' எனக் கேட்டார். அதற்கு நான் என்ன பதில் சொன்னேன்? அடுத்த வாரம் சொல்கிறேன். - தொடரும் எஸ். சந்திரமவுலி