நம்மிடமே இருக்கு மருந்து: மோர்!
நீண்ட ஆயுளை தரும் உணவாக மோரை, பழங்காலம் முதலே ரஷ்யா, ஈரான் மற்றும் எகிப்து மற்றும் பார்சிய நாட்டினர் கூறி வருகின்றனர். 2,500 ஆண்டுகளுக்கு முன்பே, 'சரகசம்கிந்தா' என்ற வேத கால நுாலில், வயிற்று நோய்களுக்கு கண் கண்ட மருந்து மோர் என, குறிப்பிட்டு உள்ளனர்.கோடைக்காலத்தில் உணவில் மோர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. நாம் சாப்பிடும் உணவானது எளிதில் ஜீரணமாகக் கூடிய பாக்டீரியாக்கள், மோரில் உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, உடலை குளிர்விக்கும்.கிராமங்களில் இன்றும் பல வீடுகளில், வரும் விருந்தாளிகளுக்கு முதலில் தண்ணீர் கொடுத்து, பின் மோர் கொடுப்பது வழக்கம். விருந்தோம்பலில் முக்கிய இடம் பிடிக்கிறது, மோர்.கோடையில் தயிரை விட, மோரே சிறந்தது. மோரில், புரோட்டீன் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக உள்ளன. கோடையில் வியர்வை மூலம் உடலில் இருந்து வெளியேறும் உப்பை, மோர் மூலமாக சுலபமாக மீட்டு விடலாம்.மோரில் உள்ள புரோட்டீன்கள், திசு வளர்ச்சியை கட்டுக்கோப்பாக வைக்க உதவுவதால், தொண்டைப்புண், வாய்ப்புண் ஆறும்.மோரில் வைட்டமின் பி உள்ளது. இதனால், உண்ட உணவு எளிதில் செரிமானம் ஆகும். அல்சருக்கு மிகவும் நல்லது. சர்க்கரையை விரைவில் சக்தியாக மாற்றி, மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. மாதவிடாய் நின்ற பின் ஒருவித மன அழுத்தத்தில் இருக்கும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மோர் அற்புதமான அருமருந்து.கெட்டி தயிரில் நிறைய தண்ணீர் கலந்து, கொஞ்சம் உப்பு, தேவையான அளவு இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தயாரிக்கப்படும், நீர் மோர், நம் உடம்பில் நீர் சமநிலையை பராமரிக்கிறது. இது, நீர் இழப்பு ஏற்படாமல் தடுகிறது.தினமும் மோர் அருந்துவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கோடையில் ஏற்படும் பல்வேறு தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மோரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்தை சீராக வைத்து, நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கோடையிலும் சருமத்தை மினுமினுப்பாக வைக்க, மோர் உதவுகிறது. தலைமுடியில் ஏற்படும் வறட்சியை நீக்குகிறது.மோரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா மற்றும் லாக்டிக் அமிலம், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. வயிறு எரிச்சல் நோயால் பாதிக்கப்பட்டோர், மோர் குடிப்பதால் பாதிப்புகள் குறையும்.பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் மோர் தடுக்கிறது. 100 மில்லி மோரில், சுமார், 116 மி.கி., கால்ஷியம் உள்ளது. இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் நல்லது. கோடையில், அதிக காரமான உணவுகள், எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அமில உற்பத்தி அதிகரித்து, சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். அவர்களுக்கு, மோர் அருமையான மருந்து.ஒரு டம்ளர் மோரில், கொஞ்சம் கருப்பு மிளகு தட்டிப் போட்டு, கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்செரிச்சல் குணமடையும்.இதய ஆரோக்கியத்தை பராமரிக்க, மோர் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு, மோர் கலந்த உணவுகளை கொடுப்பதால், அவர்களின் நோய் கட்டுப்படும். மோரில் பீட்ரூட் துருவல் மற்றும் சீரகப் பொடி சேர்த்து குடிப்பதால், செரிமானம் பலப்படும். வாயு, வீக்கம் மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ரத்த ஓட்டம் மேம்படுகிறது. ரத்த சோகையையும் குணப்படுத்துகிறது. - ஞானம் ராஜேந்திரன்.