உள்ளூர் செய்திகள்

திண்ணை!

பம்மல் சம்பந்தம் எழுதிய, 'என் சுயசரிதை!' என்ற நுாலிலிருந்து: 'நம்முடைய மதத்தையும், ஒழுக்கத்தையும் நாமே தாழ்த்திக் கொள்ளக் கூடாது; நம்மிடத்தில் தவறில்லாத போது, நாம் ஒருவருக்கும் பயப்பட வேண்டியதில்லை...' என்றார், முன்னாள் நீதிபதியான பம்மல் சம்பந்தம். சென்னை, மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் தர்ம கர்த்தாவாக இருந்தார், பம்மல்.'அமெரிக்காவிலிருந்து, சில துரைகளும், துரைசானிகளும் வந்திருக்கின்றனர். அவர்கள், மயிலை கபாலீஸ்வரர் கோவிலை பார்க்க விரும்புகின்றனர்...' என்று, தகவல் அனுப்பினார், கவர்னர் ஒருவர்.'கோவிலுக்குள், துவஜஸ்தம்பம் வரை சென்று பார்க்கலாம்; கோவிலுக்குள் நுழையும் முன், அவர்கள் தங்கள், 'பூட்ஸ்'களை கழற்றி விட்டு வர வேண்டும்...' என, பதில் அனுப்பினார், சம்பந்தம். தகவல் கொண்டு வந்த ஐரோப்பியர், 'இப்படி கூறினால் வரமாட்டார்கள்...' எனக் கூறி சென்றார். ஆனால், துரைகளும், துரைசானிகளும், ஷூக்களை வெளியே கழட்டி வைத்து விட்டு, கோவிலுக்குள் நுழைந்தனர். இன்னொரு முறை, பிரம்மோற்சவம் சமயம், ஐந்தாம் நாள், ரிஷப வாகன உற்சவத்தை பார்க்க மாடவீதியில், ஒரு வீட்டின் மாடியில், கவர்னர், அவரது மனைவி மற்றும் சில சிநேகிதர்களும் காத்திருந்தனர். ரிஷப வாகனம், அந்த வீட்டிற்கு எதிரில் வந்தபோது, சுவாமியை வாகனத்துடன் அவர்கள் இருந்த பக்கம் திருப்பி காட்ட வேண்டும் என, கூறினார், வீட்டுக்காரர். 'அப்படி செய்ய முடியாது; அவர்கள் சுவாமியை நேரில் தரிசனம் செய்ய வேண்டுமென்றால், கீழே இறங்கி வந்து நேராக தரிசனம் செய்யட்டும்...' என, பதில் கூறினார், சம்பந்தம்.சென்னை முனுசிபல் சேர்மனாக பம்மல் சம்பந்தம், பதவி வகித்த போது, ஓர் ஆங்கிலேயர், இரு குதிரைகள் பூட்டிய வண்டியில், சென்னை அடையாறு கிளப்புக்கு போய் கொண்டிருந்தார். எதிரில், பஞ்ச மூர்த்திகளுடன் வந்து கொண்டிருந்தனர், பக்தர்கள். தான் செல்வதற்கு இடைஞ்சலாக உள்ளதாக கூறி, ஒரு பக்கமாக ஒதுங்குமாறு கூறினார், அந்த ஆங்கிலேயர். அதற்கு, 'மனிதனுக்காக தெய்வத்தை ஒதுங்கச் செய்வது சரியல்ல; தெய்வத்திற்காக மனிதன் தான் ஒதுங்கிப் போக வேண்டும்...' என்று தகவல் அனுப்பினார், பம்மல்.'யார் அந்த அதிகப் பிரசங்கி...' என்று, அந்த ஆங்கிலேயர் கேட்க, பம்மல் சம்பந்தம் பெயரைச் சொல்லி, 'அவர் மிகவும் பிடிவாதக்காரர்...' என்று கூறினார், அருகில் இருந்த போலீஸ்காரர். உடனே, தன் வண்டியை பக்கத்து வீதி வழியாக சுற்றிக் கொண்டு செல்ல சொன்னார், அந்த ஆங்கிலேயர்.*****இன்று, பாலஸ்தீனிய - இஸ்ரேல் போரால், தினமும் இஸ்ரேல் நாட்டின் பெயர் அடிபட்டு கொண்டிருக்கிறது.கடந்த 1959ல், இஸ்ரேல் நாட்டின், முதல் ஜனாதிபதி இறந்ததும், உடனே அடுத்த ஜனாதிபதியை தேடினர். அவர்களது கண்ணில் பட்டது, விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தான். அன்று, இஸ்ரேல் நாட்டு பிரதமர் மற்றும் மந்திரிகள் அனைவரும், ஐன்ஸ்டைனிடம் வந்து நின்றனர். அவர்களை பார்த்து, 'என்ன செய்தி...' என்றார், ஐன்ஸ்டைன். 'நீங்கள், இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும். மக்களின் சார்பில் கேட்டுக் கொள்ள வந்திருக்கிறோம்...' என்றனர். 'ஜனாதிபதி ஆகவா?' என்றார், ஐன்ஸ்டைன்.'ஆமாம், இன்றைய யூத சமூகத்தின் மிகப்பெரிய மனிதர், நீங்கள். உங்களைத் தவிர, ஜனாதிபதி ஆக வேறு யாருக்கும் தகுதி கிடையாது...' என்றனர். அதற்கு, 'உங்கள் நல்லெண்ணத்தை பாராட்டுகிறேன். ஆனால், அப்படிப்பட்ட பதவியெல்லாம் எனக்கு ஒத்துவராது. சாதாரணமாக மனிதர்களோடு இணைந்து பழகவே தெரியாத நான், ஜனாதிபதியாக எப்படி இருக்க முடியும். தயவு செய்து மன்னித்து விடுங்கள்...' என்று கூறி மறுத்து விட்டார். - நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !