திண்ணை!
காமராஜரின் குரு, சத்தியமூர்த்தி. அந்த குருவிடமே ஒருமுறை, மன்னிப்பு கடிதம் எழுதி கேட்டு வாங்கினார், காமராஜர். கடந்த, 1940ல், சென்னை நகர மேயராக இருந்தார், சத்தியமூர்த்தி. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு, அப்போது சென்னை கவர்னராக இருந்த, ஆர்தர் ஹோப், அஸ்திவாரக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. மேயர் என்ற முறையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார், சத்தியமூர்த்தி. அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தார், காமராஜர்.வெள்ளைக்காரர்கள் கலந்து கொள்ளும் எந்த விழாக்களிலும், காங்கிரசார் கலந்து கொள்ளக் கூடாது என, கட்டுப்பாடு இருந்தது. அதை மறந்து, சத்தியமூர்த்தி கலந்து கொண்டது, பெரிய தவறு எனக்கருதி, அவரை நேரில் சந்தித்து, கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் எனக்கூறி, மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்கும்படி கேட்டார், காமராஜர்.தன் சீடன் என, காமராஜரை தாழ்வாக நினைக்காமல், உடனே, தான் கலந்து கொண்டது தவறு தான் எனக் கூறி, மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டார், சத்தியமூர்த்தி. தலைவரும் சரி, சிஷ்யனும் சரி எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு, காமராஜ் - சத்தியமூர்த்தி மன்னிப்பு கடிதம், உதாரணமாக அமைந்தது.**********நீதிபதி செம்பை சேவியர் எழுதிய, 'வேதநாயகர்' நுாலிலிருந்து: முதல் இந்திய நீதிபதி, தமிழர் என்ற அந்தஸ்துடன் பதவி ஏற்றவர், வேதநாயகம் பிள்ளை. இவர், சீர்காழியில் பணியாற்றிய போது, ஒரு வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்தது. வழக்கின் வாதங்கள் முடிந்தாலும், தவறு செய்தவர் யார் என, கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இறுதியாக, நீதிபதி வேதநாயகம் பிள்ளை, தீர்ப்பு சொல்லும் சூழல் அமைந்தது. 'இந்த வழக்கை எப்படியாவது எனக்கு சாதகமாக தீர்ப்பளியுங்கள்...' எனக் கூறி, கையிலிருந்த, 100 ரூபாயை நீதிபதி கையில் திணித்தார், வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த ஒருவர். நீதிபதியும் வாங்கி கொண்டார். வந்தவர் மகிழ்ச்சியுடன் சென்றார்.மறுநாள் நீதிமன்றத்தில் தீர்ப்பு.கையூட்டு தந்த நபர், புன்னகையுடன் இருந்தார். வேதநாயகம் பிள்ளை தீர்ப்பு கூறினார். 'இந்த வழக்கு சிக்கலாகத்தான் இருந்தது. நேற்று இரவு, என் இல்லம் வந்த, வாதி, தீர்ப்புச் சொல்ல வசதியாக, 100 ரூபாயை என்னிடம் தந்து, வழக்கின் தீர்ப்பை அவர் பக்கம் சாதகமாக கூற கேட்டுக் கொண்டார். அவர், பொய்காரர் என்பதற்கு, இதுவே சான்று...' எனக் கூறி, பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பளித்தார். மேலும், அவர் கொடுத்த, 100 ரூபாயை எடுத்து, பிரதிவாதிக்கு வழங்கி, வழக்கை முடித்து வைத்து விட்டார், நீதிபதி, வேதநாயகம் பிள்ளை.********** உணவு, உறக்கம் மற்றும் தங்களையே மறந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பர், விஞ்ஞானிகள். புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்த விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், ஒருமுறை ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தார். அவருக்காக சமைக்கப்பட்ட உணவு, தனி அறையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அங்கு வந்த அவரது நண்பர், நியூட்டனின் ஆராய்ச்சியை கெடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில், உணவு வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தார். அவருக்கும் பசி.நியூட்டன் சாப்பிட்டு விட்டு மீதம் வைத்திருக்கிறார் என நினைத்து, அந்த உணவை சாப்பிட்டு விட்டு எழுந்து சென்று விட்டார். அவர் வந்ததையோ, தன் உணவை சாப்பிட்டு சென்றதையோ கவனிக்காத நியூட்டனுக்கு சிறிது நேரம் கழித்து பசியெடுத்தது. சாப்பாட்டு அறைக்குள் நுழைந்தார். உணவு வைக்கப்பட்டிருந்த இடத்தில் காலி பாத்திரங்களே இருந்தன. அதைக்கண்டு, மெல்லப் புன்னகைத்தபடி, 'நான் ஒரு முட்டாள். சாப்பிட்டதையே மறந்துவிட்டு மீண்டும் சாப்பிட வந்திருக்கிறேனே...' என்றபடி, மீண்டும் ஆய்வுக்கூடத்துக்கு நுழைந்து விட்டார், நியூட்டன். - நடுத்தெரு நாராயணன்