உள்ளூர் செய்திகள்

திண்ணை!

முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை, ஏதேனும் ஒரு உத்தியோகத்தில் இருக்க வேண்டும் என்பது, அவரது வளர்ப்பு தாய் சின்னம்மாவின் விருப்பம். ஆனால், அண்ணாதுரைக்கோ, ஒருவரின் கீழ் பணியாற்றுவதில் விருப்பமில்லை. சிறிய தாயாரின் சொல்லை, அண்ணாதுரை எப்போதுமே தட்டிப் பேசியதில்லை. எனவே, அவரது வற்புறுத்தலின் பேரில், அப்போது, 'குமார' ராஜாவாக இருந்த, சர் முத்தையா செட்டியாரை சந்திக்க சென்றார், அண்ணாதுரை. சென்னையில், தன் அரண்மனைக்கு அருகே ஓடும் அடையாறில் படகில் அமர்ந்தபடி, அண்ணாதுரையுடன் உரையாடியபடி சென்றார், குமார ராஜா. 75 ரூபாய் சம்பளம் தரக்கூடிய கல்லுாரி விரிவுரையாளர் வேலை தர வேண்டும் என்று, அண்ணாதுரை கேட்டதற்கு, 'வேண்டாம்; ஜஸ்டிஸ் கட்சிக்கு நல்ல பேச்சாளர் கிடைப்பது அரிதாகிவிடும். அதனால், எனக்கு அந்தரங்க செயலராக இருங்கள், மாதம், 20 ரூபாய் சம்பளம் தருகிறேன்...' என்றார், குமாரராஜா. ஆனால், அண்ணாதுரை வீடு திரும்பியதும், 'அன்புள்ள ஐயா, தங்கள் பணியை ஏற்க இயலாததற்கு வருந்துகிறேன்...' என்று, ஒரே வரியில்-, ராஜாவுக்கு கடிதம் எழுதி, பிரச்னையிலிருந்து விலகி கொண்டார். பிறகு, அண்ணாதுரை வேறொரு அரசியல் பிரமுகரிடம், 'கிளார்க்' வேலைக்கு சிபாரிசு கடிதம் பெற்று, 'சப்-மாஜிஸ்திரேட்' ஒருவர் வீட்டிற்கு சென்றார். அப்போது, அவர் வீட்டினுள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வெளியில் இருந்த வேலைக்காரரிடம், ஒரு காகிதத்தில், சி.என்.அண்ணாதுரை, காஞ்சிபுரம் என்று எழுதிக் கொடுத்து, 'இதை, 'சப்-மாஜிஸ்திரேட்'டிடம் காண்பித்து, நான் வந்திருப்பதாக சொல்லு...' என்று கூறிவிட்டு, வெளியில் நின்று கொண்டிருந்தார். வேலைக்காரர் கொடுத்த சீட்டைப் பார்த்த, 'சப்-மாஜிஸ்திரேட்' சாப்பாட்டைக்கூட பாதியிலேயே வைத்து விட்டு, வெளியில் வந்தார். 'வாருங்கள்! வாருங்கள்! தாங்கள் தான் அண்ணாதுரையா? 50 வயதாவது இருக்கும் என்று எண்ணினேன். இவ்வளவு இளமையாக இருக்கிறீர்களே...' என்று கூறிக்கொண்டே, 'தாங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். ஆற்காடு ராமசாமி முதலியாரிடம் சொல்லி, எனக்கு நீதிபதி வேலை வாங்கித் தர தாங்கள் தான் சிபாரிசு செய்ய வேண்டும்...' என்று கேட்டுக் கொண்டார். வேலைத்தேடி வந்த, அண்ணாதுரையோ, தனக்கு அரசியலில் நல்ல செல்வாக்கும், எதிர்காலமும் இருப்பதை உணர்ந்து, வேலை கேட்காமல் வீடு திரும்பிவிட்டார்; தீவிர அரசியலிலும் ஈடுபடலானார். ****** பிரபல நாடக நடிகர், அவ்வை தி.க.சண்முகம் மகன், டி.கே.எஸ்.கலைவாணன் ஒரு பேட்டியில்: எ ன் தந்தை, லோக்சபா உறுப்பினராக இருந்தார். அப்போது, ராஜாஜியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், 'நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அரசாங்கம் எதுவும் உதவவில்லை. தங்களுக்கு கிடைத்து வரும் லோக்சபா உறுப்பினர் மாத ஊதியம், 500 ரூபாயை அவருக்கு தந்து உதவினால், பேருதவியாக இருக்கும். கலைத்துறையில் தாங்கள் சம்பாதித்து வருவதால், லோக்சபா உறுப்பினருக்குரிய தொகையை, நாமக்கல் கவிஞருக்கு தந்து உதவலாமே...' என்று எழுதி இருந்தார். அதுபோலவே, என் தந்தை, லோக்சபா உறுப்பினராக இருந்த காலம் வரை, நாமக்கல் கவிஞருக்கு, தன் மாத ஊதியத்தை அனுப்பிக் கொண்டிருந்தார். நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Aarbinms
ஜூன் 28, 2026 16:30

பேராசை பீடித்த அறிஞருக்கெல்லாம் அறிஞர். ஆனால் ரயிலினுடைய சமார்த்தியத்தில் கால்வாசிக் கூட இல்லை