திருவாதிரை ஸ்பெஷல்!
திருவாதிரை களி! தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பயத்தம் பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி, பொடித்த வெல்லம் - ஒரு கப், துருவிய தேங்காய் - அரை கப், நெய், முந்திரி மற்றும் ஏலப்பொடி - தேவையான அளவு.செய்முறை: அரிசி, பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக நிறம் மாறும் வரை வறுத்து, ரவை பதத்துக்கு, பொடித்து கொள்ளவும்.இரண்டு கப் தண்ணீரில் வெல்லம் சேர்த்து, அது கரைந்த பிறகு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றவும். அத்துடன் துருவிய தேங்காய் மற்றும் ரவை பதத்துக்கு உடைத்த கலவையை சேர்த்து, சிறு தீயில் மூடி வைக்கவும்.சிறிது வெந்த பின், கரண்டியால் கிளறி, ஏலப்பொடி மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து, நன்கு வேகவிட்டு இறக்கவும். தேவைப்பட்டால், வெந்த பின்பும் தேங்காய்த் துருவல் சேர்த்து கொள்ளலாம்.தாளகம்! தேவையானவை: வெண்டைக்காய் நீங்கலாக, நாட்டு காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து கொள்ளலாம். முக்கியமாக மஞ்சள் பூசணி மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு - தலா, ஆறு துண்டுகள், புளி - எலுமிச்சை அளவு, உப்பு, மஞ்சள் துாள் - தேவையான அளவு.வறுத்து அரைக்க: துவரம் பருப்பு - முக்கால் கப், துருவிய தேங்காய் - அரை கப், எள் - ஒரு தேக்கரண்டி, அரிசி - ஒரு தேக்கரண்டி, வற்றல் மிளகாய் - ஆறு.செய்முறை: முதலில் துவரம் பருப்பு, எள், அரிசி மற்றும் வற்றல் மிளகாய் ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் வறுத்து எடுத்து வைக்கவும். பிறகு, துருவிய தேங்காயை நன்கு சிவக்கும் வரை எண்ணெய் சேர்த்து வறுத்து, துவரம் பருப்பு, மிளகாய் கலவையுடன் அரைக்கவும்.வாணலியில் புளியை கரைத்து சேர்த்து, எல்லா காய்கறிகளுடன் உப்பு, மஞ்சள் துாள் சேர்த்து வேக விடவும். பிறகு, அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்க, சுவையான தாளகம் தயார்.