உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: அறியாத ஆறு அறிந்த வரலாறு!

கங்கை, காவிரி என்றால் தெரியும். பொன்முகலி என்ற ஆறு, நம் தேசத்தில் ஓடுகிறது தெரியுமா? பொன்முகலி என்றால், நிறைய பேருக்கு தெரியாது. சுவர்ணமுகி என்றால், இது, ஆந்திர மாநிலம், காளஹஸ்தியை ஒட்டி ஓடுகிற ஆறு என, கண்டுபிடிக்க வாய்ப்புண்டு. இந்த ஆற்றின் வரலாறு இனிமையானது.ஆந்திராவிலுள்ள சந்திரகிரி மலையில் உற்பத்தியாகிறது, சுவர்ணமுகி. காளஹஸ்தி வழியாக நெல்லுார் வரை ஓடுகிறது. இந்த ஆற்றில் ஒரு காலத்தில், தங்கம் குவிந்து கிடந்ததாம். இதனால், இது பளபளவென மின்னுமாம். இதன் காரணமாகவே, இந்த ஆறு, பொன்முகலி என அழைக்கப்பட்டது. பொன்முகலி என்றால், தங்க முகம் என பொருள். காளஹஸ்தீஸ்வரர் கோவில் கட்டுவதற்கு, பணியாளர்கள் இந்த ஆற்றில் இருந்து தான், மணல் எடுத்தனர். இவர்களுக்கு கூலி ஏதும் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, எவ்வளவு மண் சுமந்தனரோ, அந்தளவுக்குரிய தங்கத்துகள்கள், இவர்கள் கடைசிக் கூடை மணலை அள்ளும் போது கிடைத்து விடுமாம். இந்த அதிசயத்தை, காளஹஸ்தீஸ்வரரே நிகழ்த்தியுள்ளார்.வியாசரிடம், 'திருப்பதி திருமலை எங்கிருக்கிறது?' என, கேட்பர், பக்தர்கள். அவர்களிடம், 'தெற்கு நோக்கி செல்லுங்கள், பொன்முகலி ஆற்றை எங்கு காண்கிறீர்களோ, அப்போதே நீங்கள் திருமலையை அடைந்து விட்டீர்கள், வேங்கடவனை கண்டுவிட்டீர்கள் என்று தான் பொருள்...' என்பார், வியாசர். ஆக, இது மிக பழமையான ஆறு என்பது தெளிவாகிறது.அது மட்டுமல்ல, இந்த ஆற்றங்கரைக்கு வந்தார், அகத்தியர்.'பொன் முகலியே! நீ தெற்கு நோக்கி ஓட வேண்டாம். தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லேன்...' என்றாராம். அவரது உத்தரவை ஏற்ற ஆறு, வடக்கு நோக்கி பாய்ந்தது. இதனால், இது, உத்தர வாகினி என்ற பெயரையும் பெற்றது. உத்தரம் என்றால் வடக்கு. இந்த ஆற்றங்கரையில், 27 சிவத்தலங்கள் இருந்தன. எனினும், தொண்டவாடா அருகிலுள்ள முக்கொடி அகஸ்தீஸ்வரர் கோவில், குடிமல்லம் மற்றும் யோகிமல்லாவரத்திலுள்ள பரசுராமேஸ்வரர் கோவில்கள், கஜூலா மண்டியத்திலுள்ள மூஸ்தானேஸ்வரர் கோவில், காளஹஸ்தி கோவில் ஆகியவை பிரபலமடைந்துள்ளன.தன் கண்ணையே சிவனுக்கு தானமளித்த, கண்ணப்ப நாயனார் வரலாறு, நமக்கு தெரியுமல்லவா! இந்த ஆறு எந்த மலையில் உற்பத்தியாகிறதோ, அங்கு தான் நாயனார் வாழ்ந்தார். அவர், இந்த ஆற்றின் நீரை வாயில் கொண்டு சென்று, சிவலிங்க அபிஷேகம் செய்தார். அந்தளவுக்கு புண்ணிய ஆறு இது.அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பரில் தான் தண்ணீர் வரும். சிவனருள் இருந்தால் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரும் பாக்கியத்தை நாம் பெறலாம். ஏனெனில், தை முதல் ஆனி வரையான மாதங்களில் இங்கு நீராடினால், மறுபிறப்பே கிடையாது. இந்த பாக்கியத்தை காளஹஸ்தீஸ்வரர் தான் நமக்கு அருள வேண்டும்.தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !