உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: அம்பாளின் மார்பு ரகசியம்!

மே 8 - மீனாட்சி கல்யாணம் மதுரை நகரின் அரசியான மீனாட்சிக்கு கல்யாணம் என்றால், தமிழகமே குதுாகலிக்கும். இந்த இனிய நாளில், அந்த அன்னைக்கு மூன்று தனங்கள் இருந்தது ஏன் என்பது பற்றிய சந்தேகத்திற்கு விடை தெரிந்து கொள்வோமா!சிவனுக்கு மூன்று கண்கள்; நடுவில் இருப்பது, நெற்றிக்கண். நமக்கு ஒன்று நினைவுக்கு வரவில்லை என்றால் சுட்டு விரலால், நெற்றியைத் தட்டுகிறோம். உடனே மறந்தது நினைவுக்கு வருகிறது. அதாவது, ஞானம் பிறக்கிறது. இதனால் தான் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்த முருகனுக்கு, ஞானப்பண்டிதன் என, ஒரு பெயர் வந்தது. தனக்கு இருக்கும் இந்த தனி சிறப்பு, தனக்கு மனைவியாக வரப்போகிறவளுக்கும் இருக்க வேண்டும் என, நினைத்தார், சிவன். அவளுக்கு மூன்று மார்புகள் இருக்கும்படியாக அருள்பாலித்தார்.இதனால் தான் அவள், தடாதகை என, பெயர் பெற்றாள். தடாதகை என்றால், மாறுபட்டவள் என, பொருள். எல்லா பெண்களுக்கும் இரண்டு மார்புகளே இருக்கும். இவளோ மாறுபட்டு, மூன்றாம் மார்புடன் அவதரித்தவள்.ஜுரதேவர் என்ற தெய்வத்தை கோவில்களில் பார்த்திருப்பீர்கள். அவருக்கு மூன்று கால்கள் இருக்கும். அதிக காய்ச்சலால் அவதிப்படும் ஒருவன், இரண்டு கால்கள் இருந்தும் நிற்க முடியாமல் தள்ளாடுவான். அப்போது, அவனை தாங்கிப்பிடிக்க ஒருவர், ஊன்றுகோலாய் இருந்து உதவி செய்வார்.அதுபோல, காய்ச்சல் வந்த ஒருவனை, மூன்றாம் காலாய் இருந்து தாங்குவதாக காட்டுவதே, ஜுரதேவரின் மூன்றாம் கால் நமக்கு உணர்த்துகிறது.இதே போல, அம்பாளுக்கு மூன்று மார்புகள். தாயிடம் ஒரு குழந்தை, இரண்டு மார்புகள் மூலம் பால் பருகுகிறது. அம்பாள் எவ்வளவு பெரியவள். அவளுக்கு பூலோகத்திலுள்ள எல்லாரும் பிள்ளைகளல்லவா!ஒரு குறிப்பிட்ட வயதில், குழந்தைக்கு பாலுாட்டுவதை நிறுத்தி விடுவாள், தாய். ஆனால், அம்பாள், எல்லா உயிர்களுக்கும் தன் அருட்பாலை ஊட்டியாக வேண்டுமே! அதனால், மூன்றாவதாகவும் வற்றாத ஒரு மார்பு வேண்டும் எனக் கருதி, இதை தோற்றுவித்திருக்கலாம்.நெற்றியில் தட்டினால் ஞானம் வருவது போல, மனசாட்சிபடியும் மனிதன் நடந்து கொள்ள வேண்டுமே! இதனால் தான், அம்பாள் நடுவில் ஒரு மார்புடன் பூமிக்கு வருகிறாள்.தவறு செய்த ஒருவன், 'நான் அப்படி செய்யவே இல்லை...' என, அடம் பிடித்தால், 'உன் நெஞ்சில் கை வைத்து சொல், நீ தவறு செய்தாயா, இல்லையா?' என கேட்கிறோம். அதுபோல, 'என் அன்புக் குழந்தைகளே... நீங்கள் உங்கள் மனசாட்சி சொல்கிறபடி நியாயமாக நடந்து கொள்ளுங்கள்...' என்ற அருமையான அறிவுரையையும், தன் மூன்றாம் மார்பின் மூலம் நமக்கு எடுத்துச் சொல்கிறாள், அன்னை மீனாட்சி.இப்படி, நல்லதை மட்டுமே நினைக்கும் அன்னைக்கும், ஞானத்தை வழங்கும் தந்தைக்கும் திருமணம் நடத்தி, அதைக் கண் குளிர காணும் பாக்கியம், நமக்கு கிடைத்திருக்கிறது. அன்னையின் திருமணக்காட்சி காண தயாராவோமா! தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !