தீபாவளி ஏன் கொண்டாடணும்?
மனித மனம் மகிழ்ச்சி அடைய, நடைமுறை வாழ்க்கையில் ஏதேனும் சிறப்பு தினங்களை ஏற்படுத்தி, அந்த வழியில் குடும்ப ஒற்றுமையைப் பலப்படுத்தவும், சிக்கல்களைக் களையவும் ஏற்பட்டதே, தீபாவளி! தீபாவளி கொண்டாட முடியாதவர்கள், அன்று காலையில், விஷ்ணு கோவில் தரிசனமும், மாலையில், சிவன் கோவில் தரிசனமும் செய்யலாம். இருக்கும் ஆடைகளில் நல்லதாக எடுத்து, சந்தனம், குங்குமம் வைத்து, அணிந்து கொள்ளலாம்.அருகில் உள்ள நீர்நிலைக்குச் சென்று புனித நீராடி, கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவிரி மற்றும் தாமிரபரணி ஆகிய நதிகளை நினைத்து வணங்கலாம். வீட்டில் உள்ள நீரை பாத்திரத்தில் இட்டு, பச்சிலை, வெட்டி வேர், வேம்பு, துளசி இட்டு புனித நீராடலாம், சுமங்கலிப் பெண்கள். தீபாவளியன்று அதிகாலை, 5:30 - 6:30 மணிக்குள், கங்கா ஸ்நானம் செய்து, மறுநாள் குபேர பூஜையை மாலை, 6:00 - 7:30 மணிக்குள் செய்ய வேண்டும். கேதார கவுரி விரதமும், அமாவாசை தினம், பித்ரு பூஜையும் செய்ய வேண்டும்.தீபாவளி அன்று, திருமகள் முன், 'கங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியோடு வானானத் தருவரேணும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம். மாதவர்க்கே காந்தர் அல்லா ராகில்...' என்ற, திருநாவுக்கரசர் துதியை பாடலாம்.ஆண் - பெண் ஒற்றுமையை வலியுறுத்தல்!திருக்கயிலாய மலை வந்த பிருங்கி முனிவர், சிவபெருமானை மட்டுமே வணங்கி சென்றார். மீண்டும் ஒருமுறை வந்த போது, தன்னையும் சுற்றி வணங்கட்டுமே என்று எண்ணி, சிவபெருமானோடு நெருக்கமாக அமர்ந்து கொண்டாள், தேவி. இதைக் கண்ட பிருங்கி, வண்டாக வடிவம் கொண்டு, சிவபெருமானை மட்டும் வணங்கிச் செல்ல, கோபமுற்ற சக்தி தேவி, அவரது சக்திகளைப் பறித்தார். பிருங்கிக்கு ஊன்று கோல் கொடுத்த பரமன், தேவியை விட்டு சற்றுத் தள்ளி அமர்ந்தார். இதை உணர்ந்த தேவி, பூமிக்கு வந்து கவுதம முனிவரின் உபதேசப்படி, கேதாரீஸ்வர விரதம் இருந்து, பரமனுடன் இரண்டறக் கலந்தார். இப்பூமியில் வாழும் ஆண்- - பெண் இருவரும், தங்களுக்குள் கருத்தொற்றுமையுடன் இருந்து இல்லறம் நடத்த வேண்டும் என்பதற்கு கூறப்படும் புராண கதை இது. கேதார கவுரி விரதம் கொண்டாடப்படுவதன் காரணமும் இது தான்.எம தீபம் ஏற்றுவதன் பொருள் என்ன?தீபாவளித் திருநாளை, விரத நியமங்களோடு கொண்டாட விரும்பினார், தீர்க்க தமஸ் என்ற மகா முனிவர். அச்சமயம், இயற்கைச் சீற்றங்களால் இடையூறுகள் ஏற்படுத்தினர், அரக்கர்கள்.தவம் இயற்றி சக்திகளைப் பெற்றார், சனாதன முனிவர். அதனால், அரக்கர்களால் கஷ்டப்பட்ட எல்லாரும், அவரை சந்தித்து, இடரின்றி தீபாவளி கொண்டாடும் விரத முறையைக் கேட்டனர; அவரும் உபதேசம் செய்தார்.'தீபாவளிக்கு முதல் நாள், தேய்பிறை திரயோதசியின், மகா பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபட்டு, எம தீபம் ஏற்றி வழிபடுதல் வேண்டும். இதனால், பித்ருக்கள் சொர்க்கம் அடைவதோடு, தீபாவளி கொண்டாடுவதற்கு இடையூறாக வருகிற இடர்களும் களையப்படும்...' என்றார். நாம் விருந்துண்டு மகிழும்போது, நம்மை வளர்த்து ஆளாக்கிய முன்னோர்களுக்கும் நன்றி செலுத்த வேண்டும் என்ற உணர்வை, கடமையை இந்த தீபாவளி கதை சுட்டிக் காட்டுகிறது.