உள்ளூர் செய்திகள்

குளிர் கால டிப்ஸ்!

* பனி காலத்து தொந்தரவுகளை, 'ஏசி' அறை, இன்னும் கூட்டி விடும். 'ஏசி'யில் துாங்கினால், தலை பாரம், மூக்கில் தண்ணீர் ஒழுகும். சீதளம் இறங்கி, மூளை நரம்புகளை தாக்கும். சிலருக்கு முக வாதம் கூட ஏற்படும். 'ஏசி'யில் துாங்குவோர், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது* பனி காலத்தில், குழந்தைகளை மூச்சிரைப்பு பெரிதும் படுத்தும். வேப்ப எண்ணெயை சூடுபடுத்தி, மார்பு, தோள் பட்டை மற்றும் பின் முதுகு பகுதிகளில் தடவலாம். கொள்ளு தானியத்தை பொடி செய்து, ஒரு துணியில் வைத்து, மெல்லிய சூட்டில், பின் முதுகு மற்றும் விலா பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். ஆனால், இதயம் இருக்கும் பகுதியில் ஒத்தடம் கொடுக்க கூடாது.* சிலர், வீட்டுக்குள் கதகதப்பாக இருந்துவிட்டு, அதிகாலை எழுந்து கோலம் போடவோ, பால் வாங்கவோ வெளியே வருவர். அறை வெப்பநிலையை விட, வெளியே, 'ஜில்'லென இருக்கும். இந்த திடீர் சீதோஷ்ண மாற்றத்தை உடம்பு தாங்காது. பனி ஒத்துக் கொள்ளாமல், சளி, தும்மல் பிரச்னை வரும். 'ஸ்வெட்டர்' அணிந்தும், காதை மூடி, 'மப்ளர்' கட்டியபடி போவதும் நல்லது* பனி காலத்தில், ஒருவித தசை இறுக்கம் வரும். சூடான தேங்காய் எண்ணெயில், பச்சை கற்பூரத்தை கரைத்து வெதுவெதுப்பாக்கி, வலி இருக்கும் இடங்களில் தேய்த்தால், நிவாரணம் கிடைக்கும். ஒரு துண்டு சுக்கை தண்ணீர் விட்டு அரைத்து, லேசாக சூடுபடுத்தி, வலி இருக்கும் இடத்தில் பற்று போட வலி குறையும்* பனி துகள்கள் காற்றில் கலந்திருக்கும். அது, நம் மூக்கில் உள்ளே போய் ஜலதோஷம் ஏற்பட வழிவகுக்கும். அதனால், இரண்டு சொட்டு நல்லெண்ணெயை மூக்கில் விட்டு நன்றாக காறி துப்புங்கள். இப்படி செய்வதால், உள்ளே தேங்கியிருக்கும் பனி துகள்கள், வாய் வழியாக வெளியேறிடும் * நுரையீரலில் படிந்துள்ள பனி துகள்களை வெளியேற்ற, நான்கு மிளகுடன், கருந்துளசி ஒரு கைப்பிடி போட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்து, சீரக தண்ணீர் குடிப்பது போல, அவ்வப்போது குடிக்கலாம்* பனி கால ஜலதோஷம் நீங்க, 1 லிட்டர் தண்ணீரில், கோரைக் கிழங்கு, 10 கிராம், சுக்கு, ஐந்து கிராம் போட்டு காய்ச்சி, 0.5 லிட்டராக வற்றியபின், ஆற வைத்து குடித்தால், எப்படிப்பட்ட சளியும் கரைந்து விடும். காதில் நீர் ஒழுகல், தலை பாரம், சுவையின்மை கூட இதனால் சரியாகும்* பனி வாடையால், சிலருக்கு தலை பாரம் ஏற்படும். வெற்றிலை சாறில், ஏலக்காய், கிராம்பு சேர்த்து அரைத்து, சூடு செய்து, நெற்றியில் பற்று போட்டால், தலை பாரம் சரியாகும். பிடறி வலி மற்றும் கழுத்து வலிக்கு கூட, இந்த பற்று போடலாம்* தொடர்ந்து தயிர், மோர் சாப்பிடுவோர், குளிர் காலத்தில் அவற்றை சாப்பிட மாட்டார்கள். அதை தவிர்ப்பது நல்லதல்ல. தயிரில், வெண்ணெய் எடுத்து விட்டு, மஞ்சள் துாள் கலந்து, நல்லெண்ணெயில் ஓமத்தை தாளித்து சாப்பிடலாம். மஞ்சள் மற்றும் ஓமம், சீதளத்தை முறிக்கும். 'ஆன்டி வைரல்' ஆக, மஞ்சள் செயல்படும்* குளிர் காலத்தில், வீட்டில் சாம்பிராணி புகை போடுவது நல்லது* இச்சமயத்தில், துணிகள் சரியாக காயாது. அப்படியே மடித்து வைத்தால், வாடை வரும். புங்க மரத்து இலையை போட்டு வைக்கலாம். நாப்தலீனை போட்டு வைப்பது போல, துளசி, மரிக்கொழுந்து போட்டாலும் மணமாக இருக்கும். இவை நல்ல கிருமி நாசினி* உணவில், கறிவேப்பிலை, முருங்கை இலை, புதினா, கொத்தமல்லி, மிளகு, சீரகம் மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கொள்வது அவசியம். இவை செரிமானத்தை சீராக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !