தமிழகத்திற்கு பெருமை சேர்த்த யோகரன்!
மின் சேமிப்பு குறித்து, மத்திய அரசு நடத்திய அகில இந்திய ஓவிய போட்டியில், 60 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இப்போட்டியில், முதல் பரிசை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் மாணவர் ஏ.யோகரன்.சென்னை அண்ணாநகர், சின்மயா பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் யோகரன், சிறு வயது முதலே பேச்சு, கட்டுரைப் போட்டி மற்றும் மாறுவேடப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றுள்ளார். தற்போது ஓவியத்தில் தனித்தன்மை கொண்டு சாதித்து வரும் இவர், இரண்டாவது படிக்கும் போது பள்ளியில் கொடுக்கப்பட்ட ஓவிய புத்தகத்தில் யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே அற்புதமாக வண்ணம் தீட்டியுள்ளார். இதைப்பார்த்த இவருடைய பெற்றோர், அப்போது முதலே சிறப்பு பயிற்சி வழங்க ஆரம்பித்தனர்.இதன் காரணமாக, பள்ளி அளவில் எங்கு ஓவியப்போட்டி நடந்தாலும், அங்கு யோகரனுக்கு ஒரு பரிசு நிச்சயமாக கிடைத்துவிடும். வீடு நிறைய பதக்கங்களும், கோப்பைகளும், வரைந்த ஓவியங்களும் நிரம்பி வழிகிறது. 'தேசின் ஓவிய அகாடமி' ஆசிரியர் ஏ.ராஜேந்திரன், இவரை பட்டை தீட்டி, ஓவியத்தில் வைரமாக ஜொலிக்க வைத்ததன் உச்ச பட்சம்தான் இப்போது கிடைத்துள்ள மத்திய அரசு விருது.மாணவ, மாணவியர் மத்தியில் மின் சேமிப்பு மற்றும் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மத்திய மின்சார அமைச்சகம் ஆண்டுதோறும் இப்போட்டியை நடத்தி வருகிறது. பள்ளி அளவில் தேர்வாகும் மாணவர்கள், மாநில அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்பட்டு, பின், தேசிய அளவில் டில்லியில் நடத்தப்படும் போட்டிக்கு செல்வர்.இந்த ஆண்டு நடந்த போட்டியில், நாடு முழுவதும், 60.8 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களை வடிகட்டிய பின், டில்லியில் நடத்தப்பட்ட போட்டியில் யோகரன் முதல் பரிசைப் பெற்றுள்ளார். இவர் வரைந்த ஓவியத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.'மின்சாரத்தை சரியாக பயன்படுத்தினால் எதிர்கால இந்தியா எந்த அளவிற்கு பசுமையாகவும், தூய்மையாகவும் இருக்கும் என்பதை என் ஓவியத்தின் மூலம் காட்டியிருந்தேன். இப்போது கிடைத்துள்ள பரிசு என்னை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது. என் அடுத்த இலக்கு, சர்வதேச போட்டியில் தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதுதான்...' என்கிறார் யோகரன்.அத்விதா