உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பைக்கு கூடுதல் பணம் வசூலித்த உணவகத்துக்கு ரூ.10,000 அபராதம்

பைக்கு கூடுதல் பணம் வசூலித்த உணவகத்துக்கு ரூ.10,000 அபராதம்

பெங்களூரு: உணவு இருந்த பைக்கு கூடுதலாக, 15 ரூபாய் வசூலித்த உணவகத்துக்கு, நுகர்வோர் நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. பெங்களூரின் கிரி நகரில் வசிப்பவர் பிரணவ், 25. இவர் நடப்பாண்டு மே 8ம் தேதி, ராஜாஜி நகரின் ராஜ்குமார் சாலையில் உள்ள, ‘மேகனா புட்ஸ்’ உணவகத்தில், ஆன்லைன் வழியாக பனீர் பிரியாணி ஆர்டர் செய்தார். பிரியாணிக்கான விலையுடன், பார்சல் மற்றும் பேக்கேஜிங் கட்டணமாக, 15 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இது குறித்து, மேகனா புட்ஸ் உணவகத்துக்கும், உணவு டெலிவரி செய்த நிறுவனத்துக்கும் மின்னஞ்சல் வழியாக, பிரணவ் புகார் அளித்தார். ஆகஸ்ட் 5ல், சட்ட நோட்டீசும் அனுப்பினார். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. எனவே, ஆகஸ்ட் 27ல், பெங்களூரு நகர மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடந்த போது, மேகனா புட்ஸ் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. தன்னிச்சையாக விசாரணை நடத்திய நீதிமன்றம், ‘உணவகத்துக்கு உண்மையில் வாடிக்கையாளர்கள் மீது, அக்கறை இருந்திருந்தால் தன் உணவகத்தின் பெயர், லோகோ இல்லாத சாதாரண பையை, இலவசமாக கொடுத்திருக்கலாம். ‘ஆனால் உணவகத்தின் பெயர் மற்றும் லோகோ கொண்டுள்ள பைக்கு, வாடிக்கையாளரிடம் இருந்து பணம் பெறுவது சரியல்ல’ என, உத்தரவு இட்டது. இதையடுத்து, அந்த உணவகத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த கோர்ட், அதில், வாடிக்கையாளருக்கு, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க, உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை