| ADDED : செப் 17, 2026 03:08 AM
பெங்களூரு: நடைபாதையில் குப்பை கொட்டிய கட்டட உரிமையாளருக்கு, பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சி அதிகாரிகள், 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர். பெங்களூரின் பல பகுதிகளில் உள்ள சாலைகளின் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்தது. இதை, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தலைமையில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் நடத்தியது. மேலும், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நடைபாதைகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜி.பி.ஏ., தெரிவித்தது. இந்நிலையில், பெங்களூரு சுப்பையா சதுக்கம், ஸ்ரீனிவாஸ் காலனி சுதம் நகரில் உள்ள நடைபாதையில் கட்டுமான பொருட்களின் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. இது, அவ்வழியாக செல்லும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது. இதை அறிந்த பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சி அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, நடைபாதை முழுதும் குப்பை இருப்பதை பார்த்தனர். நடைபாதையில் குப்பை கொட்டிய கட்டட உரிமையாளர் பிரபுவுக்கு, 52, எச்சரிக்கை விடுத்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நடைபாதையை அசுத்தம் செய்ததால், அதிகாரிகள், 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.