புதுடில்லி: கடந்த மார்ச்சில், பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, 10.70 சதவீதம் உயர்ந்து, கிட்டத்தட்ட 93,624 கோடி ரூபாயாக இருந்ததாக, இ.இ.பி.சி., எனும் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.உருக்கு, இயங்திரங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை உள்ளடக்கிய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, கடந்த மார்ச் மாதத்தில், இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர், செங்கடல் வினியோக நெருக்கடி போன்ற பிரச்னைகளுக்கு மத்தியிலும், இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, இ.இ.பி.சி., தெரிவித்துள்ளதாவது:நாட்டின் சரக்கு ஏற்றுமதியில், 25 சதவீத பங்கு வகிக்கும் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதியானது, கடந்த 2024ம் நிதியாண்டில், 2.13 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 9.07 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இந்தியாவின் முன்னணி பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியாளர்களாக இருந்தன. இவை முறையே 20 மற்றும் 19 சதவீதம் பங்கு வகிக்கின்றன.எனினும், நாட்டின் மொத்த சரக்கு ஏற்றுமதி, கடந்த 2021ம் நிதியாண்டுக்கு பின், முதல் முறையாக சரிந்துள்ளது. சில சந்தைகளில், அன்னிய செலாவணி இருப்பின் குறைப்பாடு காரணமாக, வாகன ஏற்றுமதியும், 5.50 சதவீதம் சரிந்தது.உலகளாவிய தேவையில் ஏற்பட்ட மந்தநிலை, ரஷ்யா - உக்ரைன் பதற்றம் மற்றும் செங்கடல் சரக்கு போக்குவரத்து பிரச்னை ஆகியவற்றால், ஏற்றுமதி பாதித்தது. ஐரோப்பிய நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகள், மெதுவாக மீளும் சீன பொருளாதாரம் ஆகியவை, ஏற்றுமதியாளர்களுக்கு தொடர்ந்து நிச்சயமற்றதன்மையை ஏற்படுத்துகிறது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.