உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தனி அலுவலகமும், சரியான அதிகாரிகளும் இல்லாமல் தடுமாறும் டி.என்.அபெக்ஸ்

தனி அலுவலகமும், சரியான அதிகாரிகளும் இல்லாமல் தடுமாறும் டி.என்.அபெக்ஸ்

சென்னை : தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிக்க துவக்கப்பட்ட, 'டி.என்.அபெக்ஸ்' எனப்படும் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி நிறுவனத்தின் பணிகள், தனி அலுவலகமும், சரியான அதிகாரிகளும் இல்லாததால் முடங்கியுள்ளன.தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ், தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி நிறுவனம் செயல்படுகிறது. இது, 2022 - 23ல் வேளாண் துறையில் இருந்து சிறு தொழில் துறைக்கு மாற்றப்பட்டது. வேளாண் விளைபொருட்களின் சேதத்தை குறைப்பதுடன், உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் துறையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பணிகளையும் டி.என்.அபெக்ஸ் மேற்கொள்கிறது. இதன் அலுவலகம், சென்னை கிண்டியில் உள்ள 'சிட்கோ' வளாகத்தில், 'பேம் டி.என்' எனப்படும் தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அலுவலகத்தில் செயல்படுகிறது. இந்நிறுவனம், தலைமை செயல் அதிகாரி மற்றும் 21 பணியாளர்களுடன் செயல்பட அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிறுவனம், தமிழகத்தின் தனித்துவம் வாய்ந்த மற்றும் பாரம்பரிய பொருட்களுக்கு, புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும், கரூரில் முருங்கை பூங்கா உட்பட மாவட்டங்கள் வாரியாக, விளைபொருட்களுக்கு ஏற்ப தனி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை ஒரு பூங்கா கூட அமைக்கப் படவில்லை. இதற்கு தனி அலுவலகமும், சரியான அதிகாரிகளும், போதிய பணியாளர்களும் இல்லாததே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.இது குறித்து, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உணவு பதப்படுத்தும் தொழில் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, டி.என்.அபெக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, ஓய்வுபெற்ற அதிகாரிக்கு பதில், இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்க வேண்டும். ஓய்வுபெற்ற அதிகாரிகளை ஆலோசகராக நியமிக்கலாம்.ஐ.ஏ.எஸ்., அதிகாரியால் தான், வேளாண் துறை, சிறு தொழில் துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து வேலை வாங்க முடியும். விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களிடமும் அரசின் சலுகைகளை எடுத்துரைத்து, தொழில் துவங்க நடவடிக்கை எடுக்க முடியும்.எனவே, டி.என்.அபெக்ஸ் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கையை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி