சென்னை:லோக்சபா தேர்தல் முடிந்து இரு மாதங்களாகியும், மின்சார நிலைக் கட்டண குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்த, தமிழக அரசு அழைப்பு விடுக்காமல் இருப்பது, தொழில் துறையினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியதாவது: மின்சார நிலைக் கட்டணம் உயர்வால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக ஏப்ரலில் கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ராஜா ஆகியோரிடம், மின்சார நிலைக் கட்டணத்தை குறைப்பது, உச்ச நேர மின் கட்டணத்தை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.அவற்றின் மீது தேர்தல் முடிந்ததும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. தேர்தல் முடிந்து இரு மாதங்களாகி விட்டன.கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண, தொழில் சங்கங்களுடன் பேச்சு நடத்த அழைக்குமாறு, அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுவரை, அரசிடம் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. இது, தொழில்முனைவோர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, அரசு விரைந்து பேச்சு நடத்தி தீர்வு காணவில்லை எனில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, சங்கங்கள் கூடி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
விரைவான அனுமதி தேவை
ஏற்கனவே தொழில் நடத்தி வருபவர்களின் கோரிக்கைகளை தீர்த்து வைக்காத நிலையில், புதிதாக தொழில் துவங்க வருபவர்கள் தயார் நிலையில் இருந்தாலும், அனுமதிகள் விரைவாக வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.தமிழக அரசு, தொழில் முதலீடுகளை ஈர்க்க, கடந்த ஜனவரியில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது. அதில், 6.60 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதை கண்காணிக்க தொழில் துறை அமைச்சர் ராஜா தலைமையில், சிறப்பு குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் ராஜா, துறை செயலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் ராஜா பேசியது குறித்து, அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்த ஜனவரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களில் 60 சதவீத நிறுவனங்கள், தற்போது தொழில் துவங்க தயார் நிலையில் உள்ளன. “தொழில் நிறுவனங்களின் தொழிற்சாலை உள்ளிட்ட கட்டுமான பணிக்கு தேவைப்படும் அனுமதிகளை, அனைத்து அரசு துறைகளும் விரைந்து வழங்க வேண்டும். அனைத்து துறைகளும், வழிகாட்டி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்,” என்று தெரிவித்தார்.