சென்னை: கறிக்கோழி பண்ணைகளில் கோழி வளர்க்க பயன்படுத்தப்படும், தென்னை நார், நெல் உமி விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதால், நஷ்டம் ஏற்படுவதாக, தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் 40,000 உள்ளன. இத்தொழிலில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். கோழி பண்ணைகளில் வளரும் குஞ்சுகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கி 40ல் முதல் 50 நாட்கள் வரை பராமரிப்பர். இதற்காக, கொட்டகை மண்தரையில், தென்னை நார் பரப்பி குஞ்சுகளை வளர்ப்பர். இந்த தென்னை நார் கழிவுகள், தென்னை மட்டையில் இருந்து பிரித்தெடுத்து, கயிறு தயாரித்த பின் கிடைக்கும் மிச்சமாகும். பொள்ளாச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி, பட்டுக்கோட்டை, சேலம் போன்ற மாவட்டங்களில் அதிகளவில் தென்னை நார் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தென்னை நார், குஞ்சுகளுக்கு கதகதப்பை தருவதால், அதன் வளர்ச்சியை சீராக்க உதவுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களில், தென்னை நார் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு பாக்கெட் தென்னை நார் விலை, 1,500 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாகவும், தென்னை நாருக்கு மாற்றாக பயன்படுத்தப்படும், நெல் உமியின் விலை, ஒரு டன்னுக்கு 1,500 ரூபாயில் இருந்து, 2,800 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதனால், உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. மேலும், உழைப்புக்கான கூலி கூட கிடைப்பதில்லை என, பண்ணை கறிக்கோழி வளர்ப்போர் கவலை தெரிவித்துள்ளனர்.