UPDATED : ஜன 19, 2024 05:10 PM | ADDED : ஜன 17, 2024 01:02 AM
புதுடில்லி : இந்திய நிறுவனங்கள் கடந்தாண்டு சாதனை உச்சமாக, நாட்டின் நிதி சந்தைகளில் இருந்து 9.58 லட்சம் கோடி ரூபாய் திரட்டியுள்ளன என்று 'பிரைம் டேட்டாபேஸ்' நிறுவனம், அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்தாண்டு, இந்திய நிறுவனங்கள் சாதனை உச்சமாக, நிதி சந்தைகளிலிருந்து 9.58 லட்சம் கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டான 2022ல் திரட்டிய 7.58 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், இது 26 சதவீதம் அதிகமாகும். கடந்த 2022ம் ஆண்டு, 863 நிறுவனங்கள் பத்திரங்களை வெளியிட்டிருந்த நிலையில், கடந்தாண்டு 920 நிறுவனங்கள் வெளியிட்டன. அதிக கடன் தேவை மற்றும் இறுக்கமான வங்கி பணப்புழக்கம் காரணமாக, கார்ப்பரேட் பத்திரங்கள் மற்றும் பொதுப் பத்திரங்கள் வெளியீடு அதிகரித்தன.அதிகபட்சமாக நிதி நிறுவனங்களும், வங்கிகளும் 4.72 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன. இது, கடந்த 2022ல் திரட்டப்பட்ட 3.66 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், 29 சதவீதம் அதிகமாகும். திரட்டப்பட்ட மொத்த நிதியில், 41 சதவீதத்தை அரசு நிறுவனங்களே திரட்டியுள்ளன. தனியார் துறை 4.45 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.