உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உலக முதலீட்டாளர்கள் மாநாடு: லோகோ வெளியீடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: லோகோ வெளியீடு

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கான 'லோகோ'வை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.தமிழக அரசு சார்பில், சென்னையில் வரும் ஜனவரி மாதம் 7, 8 தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான முன்னோட்ட அறிமுக விழா, நேற்று சென்னையில் நடந்தது. மாநாட்டுக்கான லோகோவை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு பேசியதாவது:முதலீடுகள் சாதாரணமாக வந்து விடாது. ஆட்சி மீது நல்லெண்ணம் இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் மீது மரியாதை இருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு, முறையாக இருக்க வேண்டும். இவ்வளவும் இருந்தால் தான் முதலீடுகள் செய்ய முன்வருவர்.கடந்த 2021ல் ஆட்சி மாற்றம் நடந்த பின், தொழில் துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகின்றன. உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு, அமைச்சர் ராஜாவுக்கு நான் வைக்கும் 'டெஸ்ட்'. எந்த டெஸ்ட் வைத்தாலும், அவர் 'பர்ஸ்ட்' வருவார். தொழில் துறையும் அப்படியே செயல்பட வேண்டும். நம்முடைய செயல்கள் நமக்காக பேசும்படி, உங்கள் சாதனைகளை தொடர வேண்டும்.கடந்த இரண்டு ஆண்டுகளில், 241 கருத்துருக்கள் வழியே, 2.97 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளோம். இதன் வழியே, 4.15 லட்சம் பேருக்கு, வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, இதுவரை இவ்வாறு எங்குமே நடந்தது இல்லை என புகழும் அளவுக்கு நடத்த வேண்டும். இம்மாநாட்டின் வழியாக, பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும். தொழில் வளர்ச்சிக்கான சிறந்த இடம் தமிழகம் தான். எனவே, அனைத்து நிறுவனங்களையும் தொழில் துவங்க அழைக்கிறேன்.இவ்வாறு முதல்வர் பேசினார்.விழாவில், அமைச்சர் ராஜா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தொழில் துறை செயலர் கிருஷ்ணன், சிறு குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அருண்ராய். வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விஷ்ணு, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் தினேஷ், பல்வேறு நாடுகளின் துாதரக அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.'த' வடிவில், ' லோகோ '

தமிழ், தமிழர், தமிழகம் ஆகியவற்றை குறிக்கும் விதமாக, தமிழ் எழுத்தான 'த' வடிவில், லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழில் துறையை சேர்ந்தோர், மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், இந்நிகழ்வை காண்பதற்கு வசதியாக, நேரடி ஒளிபரப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான பிரத்யேக இணையம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

'மீள் திறனுடன், நீடித்து நிலைக்கத்தக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்பது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முக்கிய கருப்பொருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை