உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரு : 'கர்நாடகாவில் வரும் 20 முதல் 24ம் தேதி வரை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும். சிக்கமகளூரு, குடகிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.கர்நாடகாவில் கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் ஏரிகள், குளங்கள் வறண்டன. அணைகளில் போதிய நீர் இல்லை. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தலைநகரான பெங்களூரில் குடிநீர் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக, கர்நாடகாவின் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்கிறது.இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடகாவில், சில மாவட்டங்களில் கோடை மழை பெய்கிறது. வரும் நாட்களில் இம்மழை தீவிரமடையும். நாளை மறுதினம் சிக்கமகளூரு, குடகு மாவட்டத்தில் கனமழை பெய்யும். மணிக்கு 40 - 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.அந்த நாட்களில், இம்மாவட்டத்தில் வெப்பம் குறைந்து, நாள் முழுதும் குளிர் நிலவும். எனவே, இவ்விரு மாவட்டங்களுக்கும் மஞ்சள் 'அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.நாளை மறுதினம் முதல் 24ம் தேதி வரை உடுப்பி, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, பல்லாரி, பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல், சிக்கபல்லாபூர், ஹாசன், துமகூரு, மாண்டியா, ஷிவமொகா, விஜயநகரா, ராம்நகர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.அத்துடன் கர்நாடகாவின் வடக்கு மாவட்டங்களான பெலகாவி, ஹாவேரி, தார்வாட், விஜயபுரா, கொப்பால், கதக், பாகல்கோட், யாத்கிர், ராய்ச்சூர், கலபுரகியில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். வெப்பநிலையில் ஏற்ற, இறக்கங்கள் தொடர்கின்றன. இந்தாண்டு நல்ல பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி