சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மானியக்கோரிக்கையில் வெளியிடப்பட்ட 63 அறிவிப்புகளில், சென்னைக்கு 22 திட்டங்களும், கோவைக்கு இரண்டே இரண்டு திட்டங்களும் இடம் பெற்றுள்ளன.கடந்த ஜூன் 20ல் துவங்கி நடந்து வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பான மானியக்கோரிக்கை நடந்தது. இதில் மொத்தம் 63 அறிவிப்புகளை, துறை அமைச்சர் நேரு வெளியிட்டார். சென்னை மாநகராட்சியின் வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட வேறு சில திட்டங்களையும் அறிவித்தார். சென்னைக்கு 14 திட்டங்கள்
அமைச்சர் நேருவின் அறிவிப்புகளில், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான திட்டங்கள் தனியாகவும், பேரூராட்சிகளுக்கான திட்டங்கள் தனியாகவும் இடம் பெற்றிருந்தன. அதிலும் தலைநகர் என்பதால், சென்னை மாநகராட்சிக்கு என தனியாக 14 திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.மாநகராட்சிப் பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாடு, ஸ்மார்ட் வகுப்பறைகள், பூங்கா, விளையாட்டுத் திடல்கள் மேம்படுத்துதல், நீர்நிலைகள் புனரமைத்தல், துாய்மைப்பணிக்கு 500 பேட்டரி வாகனங்கள், மெட்டாலிக் காம்பாக்டர் குப்பை சேகரிப்புத் தொட்டிகள், நீர் தங்கும் பூங்காக்கள், புதிய மாமன்றக்கூடம் என ஏராளமான திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.இவற்றைத் தவிர்த்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அறிவிப்பிலும், சென்னை மாநகராட்சிக்கு எட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டு திட்டங்கள் மட்டுமே
ஆனால் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவுள்ள கோவைக்கு ஒட்டு மொத்த அறிவிப்பிலும் இரண்டே இரண்டு திட்டங்கள் மட்டுமே உள்ளன.மொத்தத்தில், கோவை பெருநகரத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அப்பட்டமாகப் புறக்கணித்திருப்பது இதில் உறுதியாகியுள்ளது. லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு வெற்றியை வாரி வழங்கியும், இந்த புறக்கணிப்பு நடந்துள்ளது. எந்த அறிவிப்புமில்லை
கோவையில் நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்திலும், எந்த சிறப்புத் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கவில்லை. இப்போது மானியக் கோரிக்கையிலும் கோவை நகருக்கென்று ஒரு பைசா நிதியையோ, சிறப்புத் திட்டத்தையோ அரசு அறிவிக்கவில்லை.எதைச் செய்தாலும், வரும் 2026ல் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியிலும் ஜெயிக்க முடியாது என்று, தி.மு.க., தலைமை நினைக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் 2019ல் லோக்சபா தேர்தலில், கோவையில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்ற பின்பு, 2021ல் சட்டமன்றத் தேர்தலில், கோவையில் 10 தொகுதிகளிலும் தி.மு.க., தோற்றதே வரலாறு!
அந்த இரண்டு திட்டங்கள்
கோவை மாநகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளிவரும் நீரை, ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் முறையில் சுத்திகரிப்பு செய்து, மறு உபயோகத்திற்குப் பயன்படுத்துவது குறித்து கலந்தாலோசகர் (கன்சல்டன்ஸி) நியமித்து, சாத்தியக்கூறு ஆராயப்படும்.திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலமாக, சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்து மின்சாரம் தயாரிக்கவும், மாற்றுப் பொருள் உருவாக்கவும், குப்பையில்லா நகரமாக்கவும் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு கன்சல்டன்ஸி நியமிக்கப்படும் என்பதே கோவைக்கென அறிவிக்கப்பட்டுள்ள அந்த இரு திட்டங்கள்.- நமது நிருபர் -