தமிழகம் முழுதும் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த போது எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் அந்தந்த தொகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தில் எம்.எல்.ஏ., அமர்ந்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இதேபோல் திண்டிவனம் சட்டசபை தொகுதிக்காக, செஞ்சி ரோடு, திரவுபதி அம்மன் கோவில் எதிரே கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தை திண்டிவனத்தைச் சேர்ந்த எந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களும் இதுவரை பயன்படுத்தவில்லை.இந்த எம்.எல்.ஏ., அலுவலகம் கடந்த 1996 - 2001ம் ஆண்டு தி.மு.க., எம்.எல்.ஏ., சேதுநாதன் பதவி வகித்தபோது ஆட்சியின் முடிவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.அதன் பிறகு, திண்டிவனத்தில் எம்.எல்.ஏ., க்களாக இருந்த அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சண்முகம், டாக்டர் ஹரிதாஸ், தற்போதைய எம்.எல்.ஏ., அர்ஜூனன் என இதுவரை யாரும் பயன்படுத்தவில்லை.கடந்த முறை எம்.எல்.ஏ., வாக தேர்வான தி.மு.க.,வை சேர்ந்த சீத்தாபதி சொக்கலிங்கம் கூட பயன்படுத்தாமல் ஐந்து ஆண்டை முடித்து விட்டார்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ., அலுவலகங்களும் செயல்பட்டு வரும் நிலையில், திண்டிவனத்தில் மட்டும் பல ஆண்டுகளாக காட்சி பொருளாக, பூட்டிக் கிடக்கின்றது. சமீபத்தில் பழுதாகிக் கிடந்த அலுவலகம் பொதுப்பணித்துறை சார்பில் சீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் இருந்தும், அலுவலகத்தை பயன்படுத்தாமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.எம்.எல்.ஏ., அலுவலம் செயல்பட்டால் பொதுமக்கள் நேரடியாக வந்து கோரிக்கை மனு கொடுக்க வசதியாக இருக்கும். அலுவலகம் இல்லாமல் இருப்பதால், தொகுதி மக்களின் கோரிக்கை குறித்து, ஏதாவது நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., வந்தால் அங்கு குறைகளைக் கூறி மனு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.எம்.எல்.ஏ., அலுவலகம் பழைமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் எதிரில் இருப்பதால், அலுவலகத்திற்கு வந்து மக்கள் பணியாற்றினால், பதவிக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என எம்.எல்.ஏ.,க்கள் பயப்படுவதாக, நகர மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக பேச்சு அடிபடுகிறது. எது எப்படியிருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., சென்டிமென்ட்டை துாக்கியெறிந்து விட்டு, தனக்கான அலுவலகத்தில் அமர்ந்து மக்கள் பணியாற் வேண்டும் என தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்--நமது நிருபர்-