உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துப்பாக்கி நாயுடு... பேரைக் கேட்டாலே அதிருதில்ல!

துப்பாக்கி நாயுடு... பேரைக் கேட்டாலே அதிருதில்ல!

நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களுக்கு, சிம்ம சொப்பனமாக விளங்கிய சுதந்திர போராட்ட வீரர்கள் பலர்; அவர்களில் சிலர், மறந்து போனவர்களின் பட்டியலுக்குள் இருக்கின்றனர். அந்த வரிசையில், 'துப்பாக்கி நாயுடு' என மக்களின் பட்டப்பெயர் சுமந்து, ஆங்கிலேயருக்கு அச்சுறுத்தலாக விளங்கியவர் தான் பெ.வரதராஜூலு நாயுடு.''அவரது நாவில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும், துப்பாக்கி குண்டுக்கு இணையான வலிமையை பெற்றிருந்ததால் தான், 'துப்பாக்கி நாயுடு' என அழைக்கப்பட்டார். அவரது பேச்சை கவனித்து, அவர் மீது வழக்கு தொடுப்பதற்கனவே சி.ஐ.டி., குழுவை அமைத்திருந்தது ஆங்கிலேய அரசு'' என்கிறார், திருப்பூர் வரலற்று ஆய்வு மைய இயக்குனர் சிவதாசன்.அவர் நம்மிடம் பகிர்ந்தவை

குமரனுக்கு முன்னோடி

திருப்பூர் குமரனுக்கு முன்னோடியாக, திருப்பூரில், 1900ம் ஆண்டுகளில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர் பெ.வரதராஜூலு நாயுடு. 1887ல், சேலத்தில் பிறந்த அவர், சிறு வயதில் பெற்றோரை இழந்த பின், திருப்பூர் வந்து, தன் அக்கா வீட்டில் தங்கி, கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் படித்தார். பின், கோல்கத்தாவில் சித்த வைத்தியம் படித்து, 'மின்சார ரசம்' என்ற பெயரில் சர்வரோக நிவாரணி கண்டுபிடித்தார். வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, பெரும் பணம் ஈட்டினார்.பின், காங்., கட்சியில் இணைந்தார். 1915ல் திருப்பூர் அர்பன் வங்கி துவங்கிய போது, கமிட்டியின் முதல் துணைத் தலைவரானார். 1916ல் திருப்பூரில் இருந்து, 'பிரபஞ்சமித்திரன்' என்ற வார இதழ் துவக்கி, ஆங்கில அரசை எதிர்த்து கட்டுரை எழுதினார். மதுரை ஹார்வி மில் தொழிலாளர் ஸ்டிரைக்கை ஊக்குவித்து அவர் பேசியதற்காக ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார்.

காந்திக்குப் பயணத்திட்டம்

இவரது பேச்சு, அத்தனை வலிமையானது. 'இவரைப் பார்த்தே பேசக் கற்றுக் கொண்டேன்' என, காமராஜர் கூறியதாக பதிவு உண்டு. மேடையில், இவர் பேசிய பின்னரே ராஜாஜி பேசுவாராம். காந்தியடிகள் திருப்பூர் வரும் போது, அவருக்கு பயணத்திட்டம் வகுப்பது இவர் தானாம். காந்தி, திருப்பூர் வரும் போது, வரதராஜூலு வீட்டில் தங்குவது வழக்கம் என்பார்கள்.சிறு வயதில் காமராஜர், இவரை வழிகாட்டியாக கொண்டிருந்தார். அடிக்கடி விருதுநகரில் இவரை வைத்து தான், காமராஜர் பொதுக்கூட்டம் நடத்துவாராம். ராஜாஜி, திரு.வி.க., வ.உ.சி., ஆகியோருடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளார்.ஒரு கட்டத்தில் காந்தியடிகளை ஆங்கிலேய அரசு கைது செய்த போது, அவரை விடுதலை செய்யும் வரை வரி செலுத்த மாட்டேன் எனக்கூறியவர் வரதராஜூலு. அதற்காக ஆங்கிலேய அரசு, அவரது கார், நிலத்தை ஜப்தி செய்தது. அவரது காரை ஓட்டி செல்ல, இந்திய ஓட்டுனர் எவரும் முன்வரவில்லை என்பது வரலாறு. அக்காலத்தில் இவர் ஆங்கிலேய அரசுக்கு செலுத்திய வரி, 3,000 ரூபாய்; அக்காலத்தில் அது மிகப்பெரிய தொகை.

பெ.வரதராஜூலு நாயுடு நுாற்றாண்டு மலர்

''கடந்த, 1924ல், பெ.வரதராஜூலு நாயுடு தமிழ்நாடு காங்., தலைவரானார். இவரது வரலாற்றை, வ.உ.சி., தயாரித்து வெளியிட்டிருக்கிறார். நாடு விடுதலை பெற்ற பின், 1951ல் சென்னை மாநில சட்ட மேலவை உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல், சமூகம், தொழிற்சங்கம், இதழியல் என பல களங்களில் முத்திரை பதித்த பெ.வரதராஜுலு நாயுடு, தனது 70 வது வயதில் (1957) காலமானார். 1988ல், இவரது நுாற்றாண்டு மலர் வெளியிட்டு, காங்., கட்சி அவருக்கு மரியாதை செய்தது'' என்று கூறினார் சிவதாசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பிரேம்ஜி
ஆக 15, 2024 11:55

இதுவரை பெரும்பாலோருக்கு தெரியாத நல்ல தகவல். சுதந்திர நாளில் வெளியிட்டதற்கு நன்றி!


subramanian
ஆக 15, 2024 10:14

ஆஹா.... தினமலருக்கு நன்றி.... படிக்க படிக்க இனிக்கிறது... தண்ணீர் விட்டு வளர்க்க வில்லை சுதந்திரம்.... ரத்தம் விட்டு வளர்த்தோம்.... திமுக, காங்கிரஸ் கொள்ளை அடிகிரங்கா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை