உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புலம்பெயரும் வங்கதேச ஹிந்துக்கள்: இந்தியாவுக்கு நெருக்கடி

புலம்பெயரும் வங்கதேச ஹிந்துக்கள்: இந்தியாவுக்கு நெருக்கடி

வங்க தேசத்தில் ஏற்பட்டுள்ள கலவர சூழலால் நெருக்கடி ஏற்பட்டு, ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. தற்காலிகமாக, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. வேலை வாய்ப்பின்மை, பொருளாதார மந்த நிலை, மதவாத அடிப்படைவாதிகளின் மேலெழுந்த போக்கு, ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கு எதிரான மக்கள் மனநிலை, இளைஞர்களும், மாணவர்களும் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்தது என, வங்க தேசத்தின் நெருக்கடியான நிலைக்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.ஆனாலும், ராணுவம் கைவிரித்த நிலையில், சொந்த நாட்டில் இருந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவே வெளியேறிவிட்ட நிலையிலும், அங்கு கலவரம் கட்டுக்குள் வருவதாக இல்லை. இத்தனை ஆண்டு காலமாக, அங்கு நிலவி வந்த மத மோதல்களும், தற்போது தலை துாக்கிவிட்டதாக கூறப்படுகிறது.காலம் காலமாக முஸ்லிம்களோடு சகஜமாக வாழ்ந்து வந்த ஹிந்துக்கள், தற்போது நெருக்கடிக்கு உள்ளாகி, இந்தியாவை நோக்கி இடம் பெறத் துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தநிலை தொடர்ந்தால், இந்தியா கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும் என்று, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

நெருக்கடி அதிகரிக்கும்

இதுகுறித்து, இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: படிப்பு, தொழில் உள்ளிட்டவைகளுக்காக, இந்தியாவில் இருந்து, லட்சக்கணக்கான ஹிந்துக்கள், வங்கதேசம் சென்றுள்ளனர். வங்க தேசத்தில் பதற்றமான சூழல் உருவான போதே, அங்கிருந்து வெளியேறத் துவங்கி விட்டனர். அவர்கள் பல்வேறு மார்க்கங்களில், இந்திய எல்லைக்கு வந்து, நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல துவங்கி விட்டனர். அவர்கள் இன்றைக்கு அல்ல; என்றைக்காவது இந்தியாவுக்கு திரும்பக் கூடியவர்கள் தான்.ஒரு நாட்டிற்கு பிழைப்புக்காகவோ, படிப்புக்காகவோ செல்கிறவர்கள், அந்த நாட்டில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டதும், சொந்த நாட்டுக்குத் திரும்புவது வாடிக்கைதான். அப்படித்தான், சமீபத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் துவங்கியதும், உக்ரைன் நாட்டுக்குச் சென்ற இந்தியர்கள் பலரும் நாடு திரும்பினர். அதேபோல்தான், சாரை சாரையாக இந்தியாவுக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், நீண்ட காலமாக அங்கிருக்கும் குடியுரிமை பெற்ற ஹிந்துக்களில் ஒரு பகுதியினரும், இந்தியாவுக்கு தப்பி பிழைக்க, ஓடோடி வருவது ஆபத்தான சூழல்தான்.

1.5 லட்சம் பேர்

தற்போதைய சூழலில், அங்கிருந்து வரும் ஹிந்துக்கள் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, 1.5 லட்சம் பேர்வரை, விரைவிலேயே இந்தியாவுக்குள் வரக் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களையும் இந்தியர்களாகத்தான் பாவிக்க வேண்டும் என, இங்கிருப்போர், அரசியலுக்காக கருத்துக்களைச் சொன்னாலும், அவர்களை இங்கே அகதிகளாகத்தான் கையாள முடியும். அப்படி வருபவர்களை ஏற்க முடியாது என, இந்தியாவால் சொல்ல முடியாது. அப்படி வருகிறவர்களுக்கு முகாம் அமைப்பதில் துவங்கி, உணவளிப்பது, வாழ்வாதாரத்துக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதுவரை, எல்லாமே இந்தியாவின் தலையாய கடமையாகி விடும். இது, இந்திய அரசுக்கு கடும் நெருக்கடியைத்தான் ஏற்படுத்தும். ஏற்கனவே இலங்கையில் இருந்து இந்தியா வந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவே, இன்றளவும் தடுமாறி வருகிறோம். இதில், வங்க தேசத்தை சேர்ந்த ஹிந்துக்களும் சேர்ந்தால், இந்தியாவுக்கு தலைவலிதான்.இப்படியொரு சூழலை சந்திக்க வேண்டும் என்பதுதான், சீனாவின் வெகு நாளைய கனவாக இருந்தது. வங்க தேசத்தில் தற்போதைய சூழல் மற்றும் நெருக்கடி வாயிலாக, அது நிகழ்வதில், சீனா சந்தோஷமாக உள்ளது. வங்க தேசத்தில் நிகழ்ந்திருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கு பின்னணியில், சீனாவின் கரங்கள் உண்டு என்பதால், எப்படி பார்த்தாலும், அது இந்தியாவுக்குத்தான் சிக்கல். வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்திருக்கும் ஏராளமான ஹிந்துக்களில், தமிழகத்துக்கு மட்டும், 30க்கும் அதிகமானோர் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

யார் இந்த நஹித் இஸ்லாம்

வங்கதேசத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர், நஹித் இஸ்லாம். டாக்கா பல்கலையில் சமூகவியல் துறையின் மாணவரான இவர், மனித உரிமைகளுக்காகவும் போராடி வருகிறார். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய, 'பாகுபாட்டிற்கு எதிரான மாணவர்கள்' அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக, நஹித் இஸ்லாம் உள்ளார். இவர், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஜூலையில் மர்ம நபர்களால் இருமுறை நஹித் இஸ்லாம் கடத்தப்பட்டார்.

ஹோட்டலுக்கு தீ வைப்பு: 24 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தின் ஜெஸ்சோர் மாவட்டத்தில், அவாமி லீக் கட்சி நிர்வாகி ஷாஹின் சக்லதாருக்குச் சொந்தமான, ஜாபிர் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ மற்ற தளங்களுக்கும் மளமளவென பரவியது. இந்த விபத்தில், இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 24 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பலி எண்ணிக்கை எவ்வளவு

வங்கதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் கலவரத்தில் 366 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 'பலி எண்ணிக்கை 366 தானா' என, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அபு ஹென்னா ரசாக்கியிடம் கேட்டதற்கு, ''குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. அப்படி சொன்னால் அது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும். செய்தியில் இடம் பெற்றுள்ளதை விட பலி எண்ணிக்கை நிச்சயம் அதிகம்,'' என்றார். டாக்காவை சேர்ந்த மூத்த செய்தியாளர் அனிஸ் ஆலம்கிர் கூறுகையில், ''வெளியான தகவலை விட பலி எண்ணிக்கை நிச்சயம் இரண்டு மடங்காக இருக்கும். இயல்பு நிலை மெல்ல திரும்புகிறது,'' என்றார்.ஹசீனா நாட்டை விட்டுச் சென்ற பின் நடந்த கலவரத்தில் நேற்று முன்தினம் மட்டும், நாடு முழுதும் நடந்த வன்முறை சம்பவங்களில் 110 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஹசீனாவை திருப்பி அனுப்ப கோரிக்கை

வங்கதேச வழக்கறிஞர்கள் சட்ட தலைவர் மஹ்பூப் உத்தீன் கோகோன் கூறியதாவது: இந்திய மக்களுடன் நாங்கள் நல்ல உறவைப் பேண விரும்புகிறோம். தயவு செய்து எங்கள் நாட்டை விட்டு ஓடிய பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஷேக் ரெஹானாவை கைது செய்து வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்புங்கள். ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் பலரை கொன்றுள்ளார். மாணவர்கள் உட்பட போராட்டக்காரர்கள் அவசர நிலையை விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

'அமித்ஷா - ஜெய்சங்கர் ஆலோசனை'

வங்கதேசத்தில் நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, வங்க தேசத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும், நம் நாட்டில் உள்ள வங்க தேசத்தை ஒட்டிய மாநிலங்களில் நிலைமை குறித்தும் விவாதித்தனர். முன்னதாக, லோக்சபாவில் நேற்று பேசிய ஜெய்சங்கர், “வங்க தேசத்தில் 19,000 இந்தியர்கள் வாழ்கின்றனர். இவர்களில், 9,000 பேர் மாணவர்கள். இதில் பெரும்பாலானோர் ஜூலை மாதத்தில் தாயகம் திரும்பியுள்ளனர்,” என்றார்.

ஹசீனா தப்புவதற்கு முன்...

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்புவதற்கு முன், அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார். இருப்பினும், நிலைமை மோசமடைந்ததை சுட்டிக் காட்டிய அதிகாரிகள், ஹசீனாவை பதவி விலகும்படி வலியுறுத்தினர்.இதற்கிடையே, அமெரிக்காவில் வசித்து வந்த ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் இதில் தலையிட்டார். பாதுகாப்பு கருதி, ஹசீனா மற்றும் அவரின் சகோதரி ரெஹானா ஆகியோரை தப்பிச் செல்ல வலியுறுத்தினார். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் போராட்டக்காரர்களால் தாக்கப்படலாம் என உளவுத் துறை எச்சரித்ததை அடுத்து, பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பினார்.

'கனத்த இதயத்துடன் வெளியேறினார்'

அமெரிக்காவில் வசிக்கும், ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வஜேத் ஜாய் கூறியதாவது: வங்கதேசத்தை விட்டு வெளியேற என் தாயார் ஷேக் ஹசீனா ஒருபோதும் விரும்பவில்லை. நிலைமை மிகவும் மோசமானதை அடுத்து, அவரது பாதுகாப்பு கருதி, நாட்டை விட்டு வெளியேறும்படி நாங்கள் தான் வலியுறுத்தினோம். கனத்த இதயத்துடனேயே, அவர் வெளியேறினார். வங்கதேசத்தை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே அவரது கனவு. அதற்காக, கடந்த 15 ஆண்டுகளாக கடினமாக உழைத்தார். தற்போது வங்கதேசத்தில் நிலவும் சூழலை பார்த்து, அவர் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

பஸ் சேவை ரத்து

மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்தின் டாக்காவுக்கு நேற்று, 50க்கும் மேற்பட்ட பயணியருடன் பஸ் சென்றது. இதில், வங்கதேசத்தைச் சேர்ந்த 45 பேர் இருந்தனர். இந்தியா - வங்கதேச எல்லையான பெட்ராபோல் என்ற பகுதியில் பஸ் வந்த போது தடுத்து நிறுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. வங்கதேச பயணியர் உட்பட அனைவரும் பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.

ஹிந்துக்களை குறிவைத்து தாக்குதல்

வங்கதேச கலவரத்தின்போது ஹிந்துக்களை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதுடன், பல கோவில்களையும் சேதப்படுத்தினர். இதுதவிர அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த இரண்டு ஹிந்து மத தலைவர்களையும் வன்முறையாளர்கள் கொன்றுள்ளனர். இதுகுறித்து வங்கதேச ஹிந்து, புத்த, கிறிஸ்துவ மத நல்லிணக்க கவுன்சில் தலைவர் கஜோல் தேவநாத் கூறுகையில், “வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையின மக்கள், கடும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். பெண்கள், குழந்தைகள் என பாரபட்சமின்றி அனைவரின் மீது தாக்குதல்களை வன்முறையாளர்கள் அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக, ஹிந்துகளை குறிவைத்து இந்த தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க ராணுவத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்

“வங்கதேசத்தில் கலவரக்காரர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினரை காக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என மத்திய அரசுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “வங்கதேசத்தில் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, அங்கு அரங்கேறி வரும் மனித உரிமை மீறல்களை தடுக்க, சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த சூழலில், நம் நாட்டு எல்லைக்குள் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்காரர்கள் நுழைவதை தடுக்க தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்பே கணித்த ஹசீனா

கடந்த மே மாதத்தில், பேட்டி ஒன்றில் ஷேக் ஹசீனா கூறியதாவது: ஒரு நாட்டின் விமானப்படை தளத்தை, வங்கதேசத்தில் அமைக்க அனுமதி அளிக்கும்படி, 'வெள்ளை மனிதர்' ஒருவரிடம் இருந்து எனக்கு கோரிக்கை வந்தது. அந்த நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை தெரிவிக்க முடியாது. இதற்கு அனுமதி அளித்திருந்தால் எனக்கு எந்த பிரச்னையும் வந்திருக்காது. என் அரசை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்படுகிறது. என் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டது போல நானும் படுகொலை செய்யப்படலாம். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

'எல்லை பகுதிக்கு செல்ல வேண்டாம்'

வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அதை ஒட்டியுள்ள நம் எல்லை பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என உள்ளூர் மக்களுக்கு பி.எஸ்.எப்., எனப்படும் இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டியுள்ள வங்கதேச எல்லை பகுதியில் உள்ள கள நிலவரங்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் எல்லை பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள அதிகாரிகளிடம், வங்கதேச எல்லை வழியாக ஊடுருவல்காரர்கள் உள்ளே வருவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தும்படியும் உத்தரவிட்டார். நம் நாட்டின் மேற்கு வங்கம், திரிபுரா, மேகாலயா, அசாம், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்கள் வங்கதேச எல்லையில் உள்ளன. இதையடுத்து, வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக யாரும் ஊடுருவாமல் தடுக்கம் வகையில் இந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mohamed Younus
அக் 17, 2024 15:59

மாட்டின் பெயரை சொல்லி இந்திய சிறுபான்மையினரும், ஷேக் ஹசீனாவின் பெயரை சொல்லி பங்களாதேஷ் சிறுபான்மையினரும் தாக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.


Navnirmaan Samrakshana
ஆக 07, 2024 20:29

அங்கிருக்கும் 19000 இந்தியர்களில் 9000 மாணவர்களாம் அந்த அளவு அந்த தரித்திரம் புடிச்ச ஊர்ல கல்வியின் தரம் அவ்ளோ உயர்ந்ததா என்ன? தீவிரவாதம் தவிர அங்கே வேற எந்த தொழிலும் சிறப்பாக நடக்க முடியாது


Venkatesan Srinivasan
ஆக 12, 2024 00:52

நீட் அகதிகள் புனர்வாழ்வு.


Ramesh Sargam
ஆக 07, 2024 20:10

புலம்பெயரும் வங்கதேச இஸ்லாமியர்கள். மம்தாவுக்கு மகிழ்ச்சி.


Rajarajan
ஆக 07, 2024 12:07

இந்தியாவில் இருந்துகொண்டு, இந்தியாவை எதிர்ப்பவர்கள், அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு இந்தியாவே அனுப்பி வைக்கும் என்று, மத்திய அரசு கூறினால், அனைவரும் அடங்கிவிடுவர். அறிவித்துவிட்டு பிறகு சொல்லவும்.


ஆரூர் ரங்
ஆக 07, 2024 11:24

இங்கு தூண்டப்படும் போலி விவசாயிகள் போராட்டம், CAA போராட்டம், மொழி போராட்டங்கள் எல்லாவற்றின் பின்னணியிலும் அமெரிக்க பணக்காரர்களின் தூண்டுதல் உண்டு. இதுதான் நம் தேசத்தை சீரழித்து இருக்கிறது நாமும் இனிமேல் போலிப் போராட்டங்களை ராணுவத்தைக் கொண்டு அடித்து நொறுக்கி அடக்க வேண்டும்.


KRISHNAN R
ஆக 07, 2024 10:09

இதில் இருந்து என்ன தெரிகிறது... அந்நாட்டில் உள்ள... நல்லவர்கள்.. எத்தனை பேர்....


mei
ஆக 07, 2024 10:00

இதே நிலை இந்தியா இந்துக்களுக்கும் வரும். வருமுன் காப்போம்.


Ram
ஆக 07, 2024 09:37

வங்கதேசத்தை இந்தியாவுடன் இணைத்துவிடவேண்டும்


Anonymous
ஆக 07, 2024 12:11

ஏன், இப்போ நமக்கு இருக்கிற பிரச்சனை பத்தாதா?


Venkatesan Srinivasan
ஆக 12, 2024 01:26

அதைத்தான் அவர்களும் ஏன் பாக்கிஸ்தானிகளும் விரும்புகிறார்கள். ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஓட்டாண்டிகளை நம்முடன் சேர்த்து கொண்டால் நாம்தான் அவர்களுக்கும் வடித்து கொட்ட வேண்டும். பாகிஸ்தான் பிரிவினை முஸ்லீம் மதவாத அடிப்படையில் நிகழ்ந்தது. நிலப்பரப்பு பரப்பளவு, செல்வங்கள் , ராணுவம் பங்கீடு அங்கு வசிக்க விரும்பிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிகழ்ந்தது. ஆனால் பிரிவினை நடந்து முடிந்த சிறிது காலத்திலேயே அங்கு இருந்த சிறுபான்மை இந்து, சீக்கிய மக்கள் ஒடுக்கப்பட்டு அடித்து விரட்டப்பட்டனர். அவர்கள் குறித்து பெற்ற பிரிவினை பங்கு நிலம் மற்றும் செல்வங்கள் பாகிஸ்தானிய பெரும்பான்மை மக்களால் கை கொள்ளப்பட்டது. இங்கு பாகிஸ்தான் என குறிப்பிடப்படுவது தற்போதைய பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் மற்றும் தற்போதைய பங்களாதேஷ் கிழக்கு பாகிஸ்தான். இரண்டும் வன்முறையாளர்கள் மற்றும் ஓட்டாண்டிகள் நிறைந்த நிலப்பரப்பு. பாரதம் ஏற்றுக் PoK போ விலகும் இதே வில்லங்கம்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 07, 2024 08:06

கான் கிராஸ் திமுக வாரிசு கம்பெனிகளின் கொள்கைப்படி அவர்களை உள்ளே விடக்கூடாது ......


அப்பாவி
ஆக 07, 2024 07:54

போனதடவைதான் பங்களா தேஷே காலியாகி இங்கே வந்து குடியேறுனாங்க. மீண்டும் குட்டி போட்டு பல்கி பெருகியாச்சு. வாங்க. வாங்க.


மேலும் செய்திகள்