| ADDED : ஜூன் 29, 2024 06:21 AM
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் துணை சபாநாயகர் ராஜவேலு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.நெட்டப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி கடந்த ஒரு வருடத்திற்கு முன் புனரமைப்பு பணிக்காக மூடப்பட்டது. இப்பள்ளியில் பயின்ற 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பண்டசோழநல்லுார் அரசு நடுநிலைப் பள்ளிக்கும், கரியமாணிக்கம் அரசு தொடக்கப் பள்ளிக்கும் மாற்றப்பட்டனர். ஆனால் இதுவரை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் துணை சபாநாயகர் ராஜவேலுவிடம் பள்ளியை மாற்றியதால் தங்களது பிள்ளைகள் வேறு பள்ளிக்கு சென்று வர சிரமமாக உள்ளது; அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, உடனே பள்ளியை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, வலியுறுத்தினர்.இதையடுத்து துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் சுப்புராயன், உதவிப் பொறியாளர் விக்டோரியா, உதவிப்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.ஆய்வில் பள்ளி புனரமைப்பு பணிக்காக மூடப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை ஏன் பணியை துவக்கவில்லை என கூறி, அதிகாரிகளிடம் துணை சபாநாயகர் கேள்வி எழுப்பினார்.இரண்டு மாதங்களில் புனரமைப்பு பணியை முடித்து பள்ளியினை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.