| ADDED : மே 08, 2024 01:34 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில், பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளதற்கு, சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலர் ஜவஹர் நன்றி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும், கோடைக்காலத்தில் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகள் சார்பில், முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் பசுமை பந்தல் அமைப்பது வாடிக்கை.ஆனால் இந்தாண்டு லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகளால் போக்குவரத்து சந்திப்புகளில், பசுமை பந்தல் அமைக்க யாரும் முன் வரவில்லை. இந்த நிலையில் சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் சார்பில் இந்தாண்டு அரசே, பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.தற்போது புதுச்சேரி அரசு சார்பில் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர், கலெக்டர், உள்ளாட்சித்துறை இயக்குநர், நகராட்சி கமிஷனர்கள், ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.