| ADDED : மார் 27, 2024 07:18 AM
புதுச்சேரி : சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என தெரிவிக்கப்பட்டது.புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி மாயமானார். போலீசார் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாய்க்காலில் மீட்கப்பட்டது. முத்தியால்பேட்டை போலீசார் பாலியல் பலாத்காரம், கொலை வழக்குப் பதிந்து சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ், 19; விவேகானந்தன், 57; இருவரை கைது செய்தனர். இந்த வழக்கை சீனியர் எஸ்.பி. கலைவாணன், எஸ்.பி. லட்சுமி சவுஜன்யா தலைமையிலான சிறப்பு விசாரணை குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டது.சிறப்பு விசாரணை குழு, சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த தடயங்கள், பெற்றோர் ரத்த மாதிரிகள், கைது செய்யப்பட்ட இருவரின் ரத்த மாதிரிகள் சேகரித்து தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. சிறையில் இருந்த கருணாஸ், விவேகானந்தன் இருவரையும் இரு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வாக்குமூலங்களை பதிவு செய்தது.சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கைகள், தடயவியல் அறிவியல் ஆய்வக பரிசோதனை அறிக்கைகள் போலீசார் பெற்றுள்ளனர். டி.என்.ஏ. பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை.இந்நிலையில், குற்றபத்திரிகை தயாரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். தடயங்கள் சேகரித்த சாட்சிகளிடம் உறுதிமொழி வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர். போக்சோ வழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சாட்சிகள் வாக்குமூலங்கள் பதிவு முடிந்து, டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகளுடன் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படும். இதற்கு இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என போலீசார் தெரிவித்தனர்.