| ADDED : ஜூலை 16, 2024 05:00 AM
புதுச்சேரி: சுப்பையா சாலை மற்றும் பிளாட்பாரத்தை 2வது முறையாக ஆக்கிரமித்து வைத்திருந்த, 'புட் ஸ்ட்ரீட்' கடைகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டது.புதுச்சேரி சுற்றுலா தளம் என்பதால், நகர பகுதியை அழகுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒயிட் டவுன் முழுதும் சாலையோர பிளாட்பாரம் கிராணைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்பாரங்கள் சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதிற்கு பதில், தள்ளுவண்டி கடைகள், புட் டெம்போக்களை அங்கு நிறுத்தி நிரந்த வியாபார ஸ்தலமாக மாற்றி விடுகின்றனர்.சுப்பையா சாலை டூப்ளக்ஸ் சிலையில் இருந்து சோனாம்பாளையம் சந்திப்பு வரை உள்ள சாலை முழுதும் தள்ளுவண்டி கடைகள், புட் டெம்போக்களை நிறுத்தி புட் ஸ்ட்ரீட் என மாற்றினர். பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத படி சாலை முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.பொதுப்பணித்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றி கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்பின்பும் அகற்றப்படாத கடைகள் கடந்த மாதம் 28 ம் தேதி அகற்றினர்.ஆனால் கடந்த வாரம் மீண்டும் அதே சாலையில் வரிசையாக ஏராளமான கடைகள் அமைத்தனர். பகல் நேரத்தில் இந்த கடைகள் சுய்ப்ரேன் வீதி, ரோமண்ட் ரோலண்ட் வீதி, துய்மா வீதிகளில் நிறுத்தி விடுகின்றனர்.இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை மத்திய கோட்டம் மற்றும் புதுச்சேரி நகராட்சி, வருவாய்த்துறையுடன் இணைந்து நேற்று 2வது முறையாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. ஒதியஞ்சாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
பழைய துறைமுக வளாகத்தில் ஏராளமான இடம் உள்ளது. சுப்பையா சாலையை மீண்டும் மீண்டும் ஆக்கிரமித்து உணவு பொருட்கள் விற்பனை செய்வோருக்கு, பழைய துறைமுக வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி கொடுத்து, அதற்கு மாத வாடகை அல்லது அடிக்காசுவை புதுச்சேரி நகராட்சி வசூலிக்கலாம். பழைய துறைமுகத்தில் போக்குவரத்து பிரச்னை வருவதிற்கு வாய்ப்பு குறைவு. எனவே, மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க இதுபோன்ற மாற்று திட்டத்தை அரசு யோசிக்கலாம்.