| ADDED : ஏப் 14, 2024 05:21 AM
புதுச்சேரி: பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய 154 நுண்பார்வையாளர்கள் தற்செயல் கலப்பு முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.புதுச்சேரி லோக்சபா தொகுதி தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு வரும் 19ம் தேதி நான்கு பிராந்தியங்களில் நடக்கிறது. வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 739 ஓட்டுசாவடிகளில், பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, 138 இடங்களில் 180 ஓட்டுச்சாவடிகள் பதட்டமான ஓட்டுச்சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளைக் கண்காணிப்பதற்காக 154 நுண்பார்வையாளர்களை தேர்வு செய்வதற்கான தற்செயல் கலப்பு, தேர்தல் பொதுப் பார்வையாளர் பியுஷ் சிங்லா, தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் முன்னிலையில் நேற்று நடந்தது. மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரி வினயராஜ், மனிதவள நோடல் அதிகாரி முத்துமீனா கலந்து கொண்டனர்.