| ADDED : மார் 25, 2024 05:03 AM
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கான மேலிட பார்வையாளர் ஜம்மூ காஷ்மீர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பியூஸ் சின்லால் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 27ம் தேதி அவர் புதுச்சேரி வருகிறார்.புதுச்சேரிக்கு செலவினப் பார்வையாளர்களாக மத்திய தணிக்கை அதிகாரி முகமது மன்ஸ்ரூல் ஹசன், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி, லட்சுமி காந்தா ஆகியோர் புதுச்சேரிக்கு கடந்த 20ம் தேதி வருகை தந்தனர். இருவரும் புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.புதுச்சேரியைச் சேர்ந்த முன்னோடி வங்கி அதிகாரிகளிடம், வங்கிகளில் மேற்கொள்ளப்படும் சந்தேகத்திற்குரிய மற்றும் அதிகப்படியான பண பரிவர்த்தனை குறித்தும் கேட்டறிந்தனர்.இதற்கிடையில், புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கான மேலிட பார்வையாளராக ஜம்மூ காஷ்மீரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பியூஸ் சின்லால் நியமிக்கப்பட்டுள்ளார்.எம்.பி.பி.எஸ்., முடித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், பெங்களூரு சட்டப்பள்ளியில் பி.ஜி., டிப்ளமோ படித்துள்ளார். ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் சார்பு செயலர், துணை செயலர் என பல்வேறு பணிகளை கவனித்துள்ள அவர், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.அவர், வரும் 27ம் தேதி புதுச்சேரி வருகிறார். தொடர்ந்து ஓட்டு பதிவு முடியும் வரை புதுச்சேரியில் முகாமிடும் அவர், லோக்சபா தேர்தல் ஏற்பாடுகளை கவனிக்க உள்ளார்.