| ADDED : ஜன 14, 2024 03:54 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்தாண்டு சைபர் கிரைம் மோசடிகளை மிஞ்சும் வகையில், ஆண்டு துவங்கிய 12 நாட்களில் 58 நபர்களிடம் இருந்து 3.38 கோடி பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பல் திருடி உள்ளது.புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை இழப்பது அதிகமாகி கொண்டே வருகிறது. நன்கு படித்த நபர்களே ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர்.கடந்த 2023ம் ஆண்டில் ஆன்லைன் மோசடி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என மொத்தம் 2,422 புகார்கள் வந்தது. ரூ. 18.03 கோடி இழந்ததாக, 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் ரூ. 83 லட்சம் பணத்தை போலீசார் மீட்டனர்.இதனை மீஞ்சும் அளவில் ஆண்டின் துவக்கத்திலே ஆன்லைன் மோசடியில் சிக்கி பணம் இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு துவங்கி 12 நாட்களில் மட்டும் புதுச்சேரியைச் சேர்ந்த 58 நபர்கள், ரூ. 3.38 கோடி பணத்தை இழந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதில், 18 வழக்குகள் தற்போது பதியப்பட்டுள்ளது. பல புகார்கள் சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் உள்ளது.சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'அதிக வருமானம் கிடைக்கும் என்ற ஆசையில், ஆன்லைன் மோசடிக்காரர்கள் கூறுவதை நம்பி முதலீடு ஏதும் செய்ய வேண்டாம்' என்றனர்.
நாளிதழ்களை படியுங்கள்
ஆன்லைன் மோசடி குறித்து தினசரி நாளிதழ்களில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதுவும் எந்த வழியில் மோசடி செய்து பணத்தை ஏமாற்றுகின்றனர் என்ற விபரமும் அதில் தெரிவிக்கப்படுகிறது. அப்படி இருந்தும், புதுச்சேரியில் நாள்தோறும் ஆன்லைன் மூலம் ஏமாறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம், பெரும்பாலனோர் பத்திரிக்கையில் வரும் செய்திகளை படிப்பது கிடையாது. இதனால் மோசடி நபர்களிடம் ஏமாறுவோர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.