உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  லோன் பெற்று தருவதாக ரூ.6.76 லட்சம் மோசடி : சென்னை வாலிபர்கள் கைது

 லோன் பெற்று தருவதாக ரூ.6.76 லட்சம் மோசடி : சென்னை வாலிபர்கள் கைது

புதுச்சேரி: லோன் பெற்று தருவதாக ரூ.6.67 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சென்னை வாலிபர்கள் 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொடாத்துாரைச் சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக கூறி உள்ளார். இதை நம்பி அந்தநபர் தன்னுடைய ஆதார், பான் கார்டு, பேங்க் புக் ஆகியவற்றை வாட்ஸ் ஆப் மூலம் அவருக்கு அனுப்பியுள்ளார். பின், மர்மநபர் ரூ.54 ஆயிரம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தால் தான் லோன் பெறமுடியும் என தெரிவித்துள்ளார். அதை நம்பி ரூ. 54 ஆயிரத்திற்கு இன்சூரன்ஸ் எடுத்தும், மர்மநபர் பல்வேறு காரணங்களை கூறி பணம் அனுப்பும்படி கூறி உள்ளார். இதுபோன்று, மர்மநபருக்கு ரூ. 6 லட்சத்து 76 ஆயிரத்து 958 வரை அனுப்பியும் அவருக்கு எவ்வித லோனும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னையை சேர்ந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கோபி கிருஷ்ணன், 36; ஊழியர் சின்னராஜ், 33; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், விசாரணையில் அவர்களிடம் 60க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்வதும், அவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, போலியாக லைப் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியை உருவாக்கி பலரையும் லோன் பெற்று தருவதாக கூறி ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து ஒரு கார், 4 லேப்டாப், 13 மொபைல் போன்கள், வங்கி புத்தகம் மற்றும் ரூ. 1.31 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கோபி கிருஷ்ணன், சின்னராஜ் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை