| ADDED : பிப் 02, 2024 03:38 AM
புதுச்சேரி: 21 கோடி ரூபாயில் பெரிய வாய்க்கால் மேம்படுத்தும் பணி துவங்கியது.புதுச்சேரி நகரின் முக்கிய வெள்ள வடிகாலாக பெரிய வாய்க்கால் உள்ளது. மொத்தம் 2.5 கி.மீ., நீளமுள்ள பெரிய வாய்க்காலில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 21 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் தேசிய கட்டுமான கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.இதற்கான பணி துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி பெரிய வாய்க்கால் மேம்பாட்டு பணியை துவக்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அரசு செயலர் மணிகண்டன், ஸ்மார்ட் சிட்டி இணை தலைமை செயலர் அதிகாரி ருத்ரகவுடு, தேசிய கட்டுமான கழகம், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கலந்து கொண்டனர். என்ன பணி
பெரிய வாய்க்காலில் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் இருந்து சுப்பையா சாலை வரை தடுப்பு சுவர் மேம்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள திப்புராயப் பேட்டை கழிவு நீர் சுத்தி கரிப்பு நிலையம் வரை 1.3 கி.மீ., தொலைவிற்கு பெரிய வாய்க்கால் தடுப்பு சுவர் மேம்படுத்தப்பட உள்ளது.இதேபோல் பெரிய வாய்க்காலில் 12 சிறிய பாலங்கள் குறுக்கிடுகின்றன. இவை பல இடங்களில் உள்வாங்கியுள்ளன. இந்த 12 சிறிய பாலங்களும் பலப்படுத்தப்பட உள்ளன. அத்துடன் பெரிய வாய்க்காலின் கரையும் பலப்படுத்தப்பட உள்ளன. அடுத்த எட்டு மாதத்தில் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.