| ADDED : நவ 28, 2025 04:47 AM
புதுச்சேரி: கதிர்காமம், இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ்., முதாலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. சுகாதார துறை செயலர் சவுதாரி முகமது யாசின் தலைமை தாங்கினார். சுகாதார இயக்குனர் செவ்வேள், இயக்குனர் உதயசங்கர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கி பேசுகையில், 'மருத்துவ கல்லுாரியில் படித்த பல மாணவர்கள் இங்கே பணிபுரிகின்றனர். அவர்கள் இங்கு சிகிச்சை அளிக்கும் முறையை பார்க்கும் போது இந்த கல்லுாரி சிறந்த மருத்துவர்களை உருவாக்கி வருவது தெரிகிறது. ஜிப்மர் மருத்துவ கல்லுாரிக்கு நிகராக புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரி திகழ்கிறது. உலக தரத்தில் இந்த கல்லுாரியை மாற்ற வேண்டும் என்பது எனது விருப்பம். இந்த கல்லுாரியில் அரசு பள்ளியில் படித்த 19 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., சேர்ந்துள்ளனர். அவர்களுக்கான கட்டணத்தை அரசு ஏற்றுள்ளது. மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டு, வரும் நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சையை அளிப்பதோடு, மக்களுக்கு பயணளிக்கும் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். மருத்துவத்தில் நாம் முதலிடத்தில் உள்ளோம். மாணவர்கள் கிராம புறத்திலும் பணியாற்ற, சேவை மனப்பான்மையுடன் படிக்க வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் கவிதா, ஜோசப் ராஜேஷ், சுரேந்தர், மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக மருத்துவமனையில் புதுப்பிக்கபப்ட்ட அவசர மற்றும் விபத்து பிரிவினை முதல்வர் துவக்கி வைத்தார்.