| ADDED : ஜன 26, 2024 05:24 AM
புதுச்சேரி : ஆட்டுப்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரில் வாய்க்கால் தோண்டியபோது சாவித்ரி என்பவரது 2 மாடி கட்டடம் சரிந்து விழுந்தது. பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆட்டுபட்டியில் உள்ள புதுச்சேரி நகராட்சியின் அரை ஏக்கர் இடத்தினை அரசு கையகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே அந்த இடத்தில் அப்பகுதி மக்கள் வேலி, கழிகள் கட்டி போட்டி போட்டு இடம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை 5:00 மணியளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நகராட்சி இடத்தினை பார்வையிட்டனர்.தொடர்ந்து, உருளையன்பேட்டை போலீசார் உதவியுடன் நகராட்சி இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். இதற்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அரசு இடத்தில் தங்காமல் வேறு எங்கு தங்க முடியும் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகராட்சி இடத்தில் வீடு கட்டி கொடுப்பது தொடர்பாக அப்பகுதி மக்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.