புதுச்சேரி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, வரதராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீராம நாம சங்கீர்த்தனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷகம் நாளை (22ம் தேதி) மதியம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள கோதண்டராம சுவாமி சன்னிதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நாளை நடக்கிறது.காலை 9:00 மணிக்கு, கோதண்டராம சுவாமி, லட்சுமணர், சீதை மற்றும் அனுமனுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து, ஸ்ரீராம நாம மகா மந்த்ர ஜப யக்ஞம், ஸ்ரீராம நாம சங்கீர்த்தனம், ஸ்ரீராம நாம கீர்த்தனைகள் நடக்கிறது. இவற்றை, புதுச்சேரி கிருஷ்ண ப்ரேமிக பஜனை மண்டலியினர் நடத்துகின்றனர்.தொடர்ந்து, 11:00 மணியளவில், உலக நலன் கருதி மகா சங்கல்பம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. மதியம் 12:00 மணியளவில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக நிகழ்ச்சிகள் பெரிய திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். வேதபுரீஸ்வரர் கோவில்
காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலிலும் காலை 11:30 மணிக்கு, ஸ்ரீராம நாம சங்கீர்த்தன பஜனை நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, அயோத்தி கோவில் கும்பாபிேஷக நிகழ்ச்சிகள் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்வுகளில் பொதுமக்கள் பங்கேற்று ராமரின் அருள் பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விழா ஏற்பாடுகளை, வேதபுரீஸ்வரர், வரதராஜப் பெருமாள் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சீனுவாசன், கோவில் பட்டாச்சாரியார்கள் மற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்துள்ளனர்.