உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ராஜ்கோட்டில் ரோகித், ஜடேஜா ராஜ்யம் * இருவரும் சதம் விளாசல்

ராஜ்கோட்டில் ரோகித், ஜடேஜா ராஜ்யம் * இருவரும் சதம் விளாசல்

ராஜ்கோட்: ரோகித் சர்மா, ஜடேஜா என இருவரும் கலக்கல் சதம் விளாச, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் சரிவில் இருந்து மீண்டது இந்திய அணி. அறிமுக வீரர் சர்பராஸ் கான் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் ராஜ்கோட்டில் நேற்று துவங்கியது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய டெஸ்ட் அணியில் 311 வது வீரராக சர்பராஸ் கான், 312 வது வீரராக துருவ் ஜோரல் அறிமுக வாய்ப்பு பெற்றனர். விக்கெட் கீப்பர் பரத் நீக்கப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாருக்குப் பதில் முகமது சிராஜ் களமிறங்கினார். ரோகித் சதம்இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், ஜெய்ஸ்வால் ஜோடி இம்முறை மோசமான துவக்கம் தந்தது. இங்கிலாந்து தரப்பில் வேகத்தில் மிரட்டினார் மார்க் உட். 10 ரன் மட்டும் எடுத்திருந்த ஜெய்ஸ்வால், முதலில் இவரது 'வேகத்தில்' வீழ்ந்தார். தொடர்ந்து மிரட்டிய உட், அடுத்து வந்த சுப்மன் கில்லை 'டக்' அவுட்டாக்கினார். ரஜத் படிதர் (5) ஹார்ட்லே சுழலில் சிக்கினார். இந்திய அணி 33 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் ரோகித், ஜடேஜா இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹார்ட்லே சுழலில் அடுத்தடுத்து ரோகித் பவுண்டரிகள் அடிக்க ஸ்கோர் சீராக உயர்ந்தது. இவர் 27 ரன் எடுத்த போது, ஹார்ட்லே பந்தில் (12.6வது ஓவர்) 'சிலிப்' பகுதியில் கொடுத்த 'கேட்ச்சை' ஜோ ரூட் நழுவவிட்டார். ஆண்டர்சன் வீசிய 14வது ஓவரின் 3வது பந்தில், ரோகித்துக்கு 'எல்.பி.டபிள்யு.,' அவுட் கொடுக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்த ரோகித், 'இன்சைடு எட்ஜ்' என மீண்டும் தப்பித்தார். அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய ரோகித், ஜோ ரூட் பந்தை சிக்சருக்கு விரட்டினார். இவர், 157 வது பந்தில் டெஸ்ட் அரங்கில் ரோகித் தனது 11வது சதம் கடந்தார். இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. சர்பராஸ் 'வேகம்'நான்காவது விக்கெட்டுக்கு 204 ரன் சேர்த்த போது, உட் பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்ட ரோகித் (131), ஸ்டோக்சிடம் 'கேட்ச்' கொடுத்து திரும்பினார். அடுத்து, அறிமுக வீரராக களமிறங்கிய சர்பராஸ் கான், மின்னல் வேகத்தில் ரன் சேர்த்தார். இவர் 48 வது பந்தில் முதல் அரைசதம் எட்டினார். சர்பராஸ், 66 பந்தில் 62 ரன் எடுத்த போது, துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். ஜடேஜா அபாரம்மறுபக்கம் சொந்தமண்ணில் சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்த ஜடேஜா, டெஸ்ட் அரங்கில் 4வது சதம் அடித்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 326 ரன் எடுத்திருந்தது. ஜடேஜா (110), குல்தீப் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

'உலக' அணிக்கு கேப்டன்

இந்திய 'டி-20' அணி கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா காயத்தில் உள்ளார். இதையடுத்து ரோகித் சர்மா, மீண்டும் 'டி-20' அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 'டி-20' உலக கோப்பை தொடர் (ஜூன் 1-29) நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணிக்கு, காயத்தில் இருந்து தேறிய பின், பாண்ட்யா மீண்டும் கேப்டன் ஆவாரா, இல்லை ரோகித் தொடர்வாரா என சந்தேகம் உள்ளது.இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு செயலர் ஜெய் ஷா கூறியது:சொந்தமண்ணில் 2023ல் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வெல்லாமல் இருக்கலாம். இருப்பினும் தொடர்ந்து 10 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. வரும் உலக 'டி-20' தொடரில் ரோகித் தலைமையில் இந்திய அணி எப்படியும் கோப்பை வெல்லும் என நம்பிக்கை உள்ளது,'' என்றார். இதனால் உலக கோப்பை தொடரில் ரோகித் கேப்டனாக இருப்பது உறுதியானது.

34

மூன்று வித கிரிக்கெட்டில் 30 வயதுக்கும் மேல் அதிக சதம் அடித்த வீரர்களில் ரோகித் (34 சதம்), 5வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக இவர், 11 டெஸ்ட், 31 ஒருநாள், 5 'டி-20' என 47 சதம் அடித்துள்ளார். முதல் நான்கு இடத்தில் சங்ககரா (43, இலங்கை), ஹைடன் (36), பாண்டிங் (36, ஆஸி.,), சச்சின் (35) உள்ளனர்.

204

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 4வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடி வரிசையில் ரோகித்-ஜடேஜா மூன்றாவது இடம் பிடித்தனர். நேற்று இந்த ஜோடி 204 ரன் சேர்த்தது. முதல் இரு இடத்தில் சச்சின்-கங்குலி (249 ரன், 2002), விஜய் மஞ்ச்ரேகர்-விஜய் ஹசாரே (222, 1952) ஜோடி உள்ளன.

250... 3000

நேற்று ஜடேஜா 110 ரன் எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் 3000 ரன் என்ற மைல்கல்லை அடைந்தார். இதையடுத்து டெஸ்டில் 3000 ரன், 250 விக்கெட்டுக்கும் மேல் வீழ்த்திய மூன்றாவது இந்திய 'ஆல் ரவுண்டர்' ஆனார் ஜடேஜா (3003 ரன், 290 விக்.,). முதல் இரு இடத்தில் கபில் தேவ் (5248 ரன், 434 விக்.,), அஷ்வின் (3271 ரன், 499 விக்.,) உள்ளனர்.

தோனியை முந்தினார்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த கேப்டன் வரிசையில் இந்தியாவின் தோனியை (330 போட்டி, 211 சிக்சர்) முந்திய ரோகித் இரண்டாவது இடம் பிடித்தார். மூன்று வித கிரிக்கெட்டில் இதுவரை 212 சிக்சர் (121 போட்டி) அடித்தார் ரோகித். முதலிடத்தில் இங்கிலாந்தின் மார்கன் (233, 180) உள்ளார். * தவிர இந்திய டெஸ்ட் அரங்கில் அதிக சிக்சர் அடித்தவர்களில் ரோகித் (79), தோனியை (78) முந்தி, இரண்டாவது இடம் பெற்றார். இதில் சேவக் (91) முதல்வனாக நீடிக்கிறார்.

'சீனியர்' கேப்டன்

டெஸ்ட் அரங்கில் அதிக வயதில் சதம் அடித்த இந்திய கேப்டன் ஆனார் ரோகித் (36 வயது, 291 நாள்). இரண்டாவது இடத்தில் விஜய் ஹசாரே (36, 278) உள்ளார்.

சர்பராஸ் ரன் அவுட் ஏன்

இந்திய வீரர் சர்பராஸ் கான் 26. கடந்த 2016, 19 வயது உலக கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்தவர். கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் ரன் மழை பொழிந்தார். நேற்று அறிமுகம் ஆன இவருக்கு சுழல் 'ஜாம்பவான்' கும்ளே, இந்திய அணிக்கான தொப்பி வழங்கினார். இதை தனது தந்தை, பயிற்சியாளர் நவுஷாத்திடம் கொடுத்தார். அதை வாங்கிய அவர் அப்படியே முத்தமிட்டு மகிழ்ந்தார். பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சர்பராஸ், துணிச்சலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இவர் 62 ரன் எடுத்த போது, ஜடேஜா அழைத்ததால் ரன் எடுக்க ஓடினார். திடீரென மனதை மாற்றிய ஜடேஜா, ரன் வேண்டாம் என சர்பராசை திரும்பிச் செல்லுமாறு தெரிவித்தார். இதற்குள் உட், ஸ்டம்சை தகர்க்க, சர்பராஸ் வீணாக ரன் அவுட்டானார். டிரசிங் ரூமில் இருந்த கேப்டன் ரோகித், கோபத்துடன் தொப்பியை கீழே எறிந்தார். இதற்கு ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில்,' சர்பராஸ் நன்றாக விளையாடினார். எனது தவறான அழைப்பு காரணமாக ரன் அவுட் ஆனது வருத்தமாக உள்ளது,' என தெரிவித்துள்ளார்.

48

டெஸ்டில் அறிமுக போட்டியில் (2000க்குப் பின்) அதிவேக அரைசதம் அடித்த வீரர்களில் ஹர்திக் பாண்ட்யாவுடன் (2017) இணைந்து முதலிடம் பெற்றார் சர்பராஸ். இருவரும் 48 பந்தில் அரைசதம் எட்டினர்.

97

சர்பராஸ் தந்தை, பயிற்சியாளர் நவ்ஷாத். இவரது பெயரை குறிப்பிடும் வகையில், தனது ஜெர்சியில் '97' என்ற எண் பொறித்துள்ளார். அதாவது இந்தியில் 'நவ்' என்றால் 9, 'ஷாத்' என்றால் 7 என அர்த்தம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி