| ADDED : ஜூலை 29, 2024 11:12 PM
பாரிஸ்: ஒலிம்பிக் வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி காலிறுதியுடன் வெளியேறியது. ஒலிம்பிக்கில் நேற்று ஆண்கள் அணிகளுக்கான வில்வித்தை போட்டி நடந்தது. இந்தியா சார்பில் திராஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், பிரவின் ஜாதவ் இடம் பெற்ற அணி பங்கேற்றது. இதன் தகுதிச்சுற்றில் இந்திய அணி 3வது இடம் பிடிக்க, நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியது. நேற்று நடந்த இப்போட்டியில் தரவரிசையில் 6வது இடம் பிடித்த துருக்கியின் கஜோஸ், பெர்கிம், அப்துல்லா இடம் பெற்ற அணியை எதிர்கொண்டது. வழக்கம் போல இந்திய வீரர்களின் இலக்கு அடுத்தடுத்து குறி தவற, முதல் செட்டை இந்தியா 53-57 என இழந்து, 0-2 என பின்தங்கியது.அடுத்த செட்டிலும் ஏமாற்றம் தொடர, 52-55 என கோட்டை விட்டது இந்தியா (0-4). மூன்றாவது செட்டை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் 55-54 என வசப்படுத்தியது இந்தியா (2-4). நான்காவது முதல் 5 'ஆரோவில்' சிறப்பாக செயல்பட்டது. கடைசி வாய்ப்பில் திராஜ் 7 புள்ளி மட்டும் எடுக்க, 54-58 என செட்டை இழந்தது. முடிவில் இந்திய அணி 2-6 என தோற்று, காலிறுதியுடன் வெளியேறியது. அடுத்து தனிநபர், கலப்பு இரட்டையர் போட்டிகளில் இந்தியா பங்கேற்க உள்ளது.