மறைமலை நகர்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு காரணமாக, மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சமீப காலமாக விபத்துகள் அதிகரித்து வருகின்றன.அதனால், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்காக, சப்- - கலெக்டர் நாராயணசர்மா தலைமையில் குழு அமைத்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.இந்த குழுவினர், செங்கல்பட்டு முதல் பல்லாவரம் வரை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், சாலையின் இருபுறமும் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது தெரிய வந்தது.இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதையடுத்து, நேற்று முன்தினம் காலை செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி தலைமையில், வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார், பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை துவங்கினர்.சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கட்சிக் கொடிகள், கல்வெட்டுகள், பெயர் பலகைகள், தள்ளுவண்டி உணவகங்கள், பழக்கடைகள், டீ கடைகளுக்கு வெளியே நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட கூடுதல் கட்டடங்களை, வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அப்புறப்படுத்தினர்.வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார், முன்னரே கடைகளின் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை இடிப்பது குறித்து தெரிவித்திருந்ததால், ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று, ஜி.எஸ்.டி., சாலையில், தாம்பரம் மார்க்கத்தில் டாக்கா நகர் பகுதியில் இருந்து, திருத்தேரி வரை சாலையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த அனைத்து கடைகளும் அகற்றப்பட்டன.இந்த பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் எச்சரித்தனர்.