| ADDED : ஆக 12, 2024 04:25 AM
மறைமலை நகர் : திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் வேடியப்பன், 34. செங்கல்பட்டு அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.வேடியப்பன் மற்றும் அவருடன் வேலை பார்த்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பம், 26, இருவரும், நேற்று மாலை செங்கல்பட்டில் இருந்து ரெட்டிபாளையத்திற்கு 'ஸ்பிளண்டர்' இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை வேடியப்பன் ஓட்டினார்.செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில், வில்லியம்பாக்கம் பகுதியில் வந்த போது, பின்னால் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த 'டூரிஸ்டர்' வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது.இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருந்த புஷ்பம், சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த வேடியப்பனை, சக வாகன ஓட்டிகள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், புஷ்பம் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய வேன் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.