சென்னை : காணும் பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சென்னை போலீஸ்
கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனர்கள், பிரேம் ஆனந்த் சின்ஹா, சுதாகர்,
அஸ்ராகார்க் ஆகியோர், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் மெரினா, எலியட்ஸ், செங்கல்பட்டு மாமல்லபுரம் கடற்கரைகளில் இன்று சுற்றுலா பயணியர் அதிகம் குவிவர் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 17,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 'ட்ரோன்' மற்றும் நவீன 'சிசிடிவி' கேமராக்கள் அமைத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். அப்போது அவர்கள் கூறியதாவது:பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் காணும் பொங்கலை பொதுமக்கள் கொண்டாடும் வகையில், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலில் இறங்க அனுமதிகிடையாது. கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.சென்னை காவல் துறை சார்பில் மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட கடற்கரைகளிலும், பொழுதுபோக்கு பூங்காக்களிலும் பாதுகாப்பு பணியில், 15,500 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படை வீரர்கள் என, 17,000 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில், 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் மூன்று பேர் பணியமர்த்தப்படுவர். அடையாள அட்டை
கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால், உடனடியாக மீட்பதற்காக, சென்னை போலீஸ் கமிஷனரகம் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள், காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் வைக்கப்பட்டுள்ளன.இதில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர். எனவே, குழந்தைகளுடன் வரும் பெற்றோர், மேற்கூறிய காவல் உதவி மையங்களின் அடையாள அட்டை பெற்று கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவர்.மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில், தலா நான்கு ட்ரோன் கேமராக்கள் என, மொத்தம் எட்டு ட்ரோன் கேமராக்கள் வாயிலாக தீவிரமாக கண்காணிப்படும். சாலை பாதுகாப்பு
கடலோர மணற்பகுதிகளில் காவல்துறையின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும்.சாலை விபத்து தடுப்பு நடவடிக்கையாக, சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று, பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்குவர். இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, மதுரவாயல் பை - பாஸ் சாலை, ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில், தடுப்புகள் அமைத்து போலீசார் சோதனையில் ஈடுபடுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வண்டலுார் பூங்கா தயார்
தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லையில், 1,200 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை, வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வண்டலுார் உயிரியல் பூங்காவில், இன்று ஏராளமானோர் குவிவர் என்பதால் கூட்டத்தை சமாளிக்க, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கூட்டம் கூடுவதை தடுக்க, க்யூ.ஆர்., குறியீடு வசதியுடன் கூடிய 10 டிக்கெட் கவுன்டர்கள். டிக்கெட்டுகளை உடனுக்குடன் 'ஸ்கேன்' செய்து உள்ளே அனுப்ப, ஏழு ஸ்கேனிங் இயந்திரங்கள், மெட்டல் டிடெக்டர், 20 இடங்களில் குடிநீர், கழிப்பறை, சிறுவர்கள் காணாமல் போனால் எளிதாக கண்டுபிடிக்கும் வகையில், கையில் ஸ்டிக்கர்ஒட்டுதல், மருத்துவ குழு, தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தவிர, வேலுார், விழுப்புரம் சரகங்களில் இருந்து, 100 வனத்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.மேலும், 100 போலீசார், 150 தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தடை
காணும் பொங்கலையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில், 30 இடங்களில், 750க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.மேலும், சுற்றுலா பயணியர் மாமல்லபுரம் சிற்பங்கள் காண குவிவர். அவர்கள் கடலில் குளிப்பதை தடுக்க போலீசார் தடைவிதித்துள்ளனர். மாமல்லபுரம் நகர் பகுதிக்குள் கார், பேருந்து ஆகியவற்றுக்கு இன்று அனுமதி இல்லை. இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அரசு, மாநகர் பேருந்துகள், புறவழி சந்திப்பிலிருந்தே இயக்கப்படும். அங்கிருந்து நகர் பகுதிக்குள் வர, மாநகர் மினி ேருந்து இயக்கப்படுகிறது. மாமல்லபுரத்தில் பாதுகாப்பிற்காக, 200 போலீசார் கண்காணிப்பர்.