செங்கல்பட்டு: செங்கல்பட்டில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால், நகர மக்கள் அதிருப்தியில் உள்ளனர். செங்கல்பட்டு நகராட்சியில், அனுமந்தபுத்தேரியில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. நகர மக்கள் அதிகமானோர் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெற வருகின்றனர். இங்கு இடநெருக்கடி ஏற்படுவதால், கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு, சுகாதாரத் துறையினர் அறிக்கை அனுப்பி வைத்தனர். இதையடுத்து, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம் கட்ட, 60 லட்சம் ரூபாய் நிதியை, மத்திய சுகாதாரத் துறை 2022ம் ஆண்டு ஒதுக்கியது. இப்பணிக்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில், 'டெண்டர்' விடப்பட்டு, கடந்தாண்டு ஆகஸ்டில் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. 'இப்பணிகளை, மூன்று மாதத்திற்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்' என, நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் தற்போது, பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. மூன்று மாதங்கள் கடந்தும், இப்பணிகளை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்வது இல்லை. இதனால், பணிகளில் இழுபறி நீடிப்பதாக, நகர மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்படும் கூடுதல் கட்டட பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மாதத்திற்குள் முடியும் நகராட்சி பொறியாளர்கள் கூறியதாவது: செங்கல்பட்டு நகராட்சி, அனுமந்தபுத்தேரியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் முடிந்துள்ளன. மற்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து, ஒரு மாதத்திற்குள் புதிய கட்டடம் சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.