உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு அடுத்த மர்மம் ஊனமாஞ்சேரியில் தொடர் சம்பவத்தால் அதிர்ச்சி

200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு அடுத்த மர்மம் ஊனமாஞ்சேரியில் தொடர் சம்பவத்தால் அதிர்ச்சி

வண்டலுார்: ஊனமாஞ்சேரி, பெரிய ஏரி அடுத்துள்ள 400 ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள், வனத்துறை, பொதுப்பணி துறைக்குச் சொந்தமான இடத்தில் இருந்த, 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள், வேரோடு வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. தவிர, 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிக்கப்பட்டு, தடயங்கள் மறைக்கப்பட்டுள்ள விவகாரம், இயற்கை ஆர்வலர்களிடையே பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் தாலுகா, ஊனமாஞ்சேரி ஊராட்சியில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், சர்வே எண் 329ல், 116 ஏக்கர் பரப்புள்ள பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அப்பால், அரசுக்குச் சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள், வனத்துறைக்குச் சொந்தமான காப்புக் காடுகள் மற்றும் 400 ஏக்கர் பரப்புள்ள விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில், 3,000க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. எரிப்பு இதில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள், தனி நபர்களின் ஆதாயத்திற்காக வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளன. தவிர, 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டு, தடயங்கள் மறைக்கப்பட்டு உள்ளன. இந்த பனை மரங்கள் அழிப்பு வேலையை, தனி நபர்கள் தங்கள் ஆதாயத்திற்காக செய்துள்ளதாக, இயற்கை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இது குறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: ஊனமாஞ்சேரி பெரிய ஏரிக்கு அடுத்துள்ள 400 ஏக்கர் விவசாய நிலங்களை,'ரியல் எஸ்டேட்' தொழிலுக்கு பயன்படுத்தும் நோக்கில், சில 'கார்ப்பரேட்' நிறுவனங்கள், சினிமா தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது. சுற்றிலும் அடர்ந்த காடுகள் உள்ள இந்த விவசாய இடத்திற்குச் சென்று வர, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், சாலை வசதி கிடையாது. சித்தேரியிலிருந்து 600 மீ., துாரம், கால்நடையாக பெரிய ஏரியை வந்தடைந்து, அதன் பின், பெரிய ஏரியின் உபரி நீர் வெளியேறும் பாதையைக் கடந்தே விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியும். இந்நிலையில், விவசாய நிலங்களை மலிவான விலைக்கு வாங்கி, அதை அரசு அதிகாரிகள் துணையோடு, வீட்டு மனை பிரிவுகளாக்க, தனியார் கட்டுமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்காக, பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலமாக பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, விவசாய நிலங்களையும், சித்தேரி கரையையும் இணைக்கும்படி, பெரிய ஏரிக்கு குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டிய சூழல் உருவானது. முறைகேடு அடர்ந்த காட்டுக்குள், மக்கள் நடமாட்டம் இல்லாத பகு தியில் ஏரி மற்றும் வனப்பகுதியை ஆக்கிரமித்து மேம்பாலம் கட்ட, சி.எஸ்.ஆர்., எனும், பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்ட நிதி, இதற்காக முறைகேடாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை, தி.நகரிலுள்ள ஆர்.எஸ்.எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் சார்பில், கடந்த 2021 மே 6ம் தேதி, மேம்பாலம் கட்ட அனுமதி கோரப்பட்டது. பின், கடந்தாண்டு ஜன., 22ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கி உள்ளார். சென்னை, தி.நகரில் உள்ள ஆர்.எஸ்.எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு, ஒரே ஒரு நபர் மட்டுமே வந்து, சிறிது நேரம் இருந்துவிட்டுச் செல்கிறார். இதன் மூலம், அந்த நிறுவனம் முறையான நிறுவனம் அல்ல. வேறு ஏதோ நிறுவனத்தின் 'பினாமி'யாக இருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது. எனவே, சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக மேம்பாலம் கட்டும் ஆர்.எஸ்.எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின், கடந்த 10 ஆண்டுகால செயல்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் , 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு எரிக்கப்பட்டதற்கும், விவசாய நிலங்கள், ரியல் எஸ்டேட் தொழில் மூலமாக வீட்டு மனைப் பிரிவுகளாக மாற்றம் பெறப் போவதற்கும், ஏரி வனப்பகுதியை ஆக்கிரமித்து மேம்பாலம் கட்டப்பட்டுள்ளதற்கும் மர்ம தொடர்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை