உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நல்லம்பாக்கம் - கீரப்பாக்கம் சாலை பணி...துவக்கம் !: 25 ஆண்டுகளுக்கு பின் வனத்துறை அனுமதி

நல்லம்பாக்கம் - கீரப்பாக்கம் சாலை பணி...துவக்கம் !: 25 ஆண்டுகளுக்கு பின் வனத்துறை அனுமதி

செங்கல்பட்டு: நல்லம்பாக்கம் - கீரப்பாக்கம் வரையிலான, 2 கி.மீ., தொலைவு, சாலை அமைக்கும் பணி மேற்கொள்ள, 25 ஆண்டுகளுக்கு பின், வனத்துறை அனுமதி அளித்துள்ளது. சாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ள நெடுஞ்சாலைத் துறையினர், 'மூன்று மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, சாலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என, தெரிவித்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, ஊரப்பாக்கம், காட்டூர், காரணைபுதுச்சேரி, அருங்கால், குமுளி, கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் வரை, 12.4 கி.மீ., சாலை, நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இச்சாலையில், நல்லம்பாக்கம் - கீரப்பாக்கம் வரையிலான 2 கி.மீ., துாரம், வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியில் செல்கிறது.நல்லம்பாக்கம் பகுதியில், மத்திய தார் சுடுகலவை இயந்திரங்கள், ஜல்லி அரவை இயந்திரங்கள் என, தலா 100க்கும் மேற்பட்டவை உள்ளன.ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை இயந்திரங்கள் 30க்கும் மேற்பட்டவையும் உள்ளன. இங்கிருந்து, 1,000த்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

அத்தியாவசிய பணி

இப்பகுதியினர், கூடுவாஞ்சேரி, வண்டலுார், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, பள்ளி, கல்லுாரி, அத்தியாவசிய பணிகளுக்கு சென்று வருகின்றனர். இத்தடத்தில், தாம்பரம் - கீரப்பாக்கம் வரை, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்பகுதியில் இருந்து, தினமும் 1,000த்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இயக்கப்பட்டதால், தார் சாலை சீரழிந்து, போக்குவரத்துக்கு பயனற்றதாக மாறியது.இத்தடத்தில் இயங்கிய மாநகர பேருந்துகள் நிறுத்தப்பட்டன. வனப்பகுதியில் உள்ள சாலையை புதுப்பிக்க, வனத்துறை அனுமதி தராததால், நெடுஞ்சாலைத் துறையினர் சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சீரழிந்த சாலை, கற்கள் பெயர்ந்து, கரடுமுரடான அபாய பள்ளங்களுடன், விபத்து அபாயங்களுடன் இருந்தது.சாலையை சீரமைக்கக்கோரி, தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை, அப்பகுதி மக்கள் நடத்தினர்.தொடர்ந்து, சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்க, நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தனர். இதையேற்று, நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்க, வனத்துறை அனுமதி அளித்தது.அதன்பின், நல்லம்பாக்கம் - கீரப்பாக்கம் இடையிலான வனப்பகுதியில் உள்ள 2 கி.மீ., சாலை அமைக்க, 5.50 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.இப்பணிக்கு, கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி டெண்டர் விடப்பட்டது. ஆனால், பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இது குறித்து நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.

பகுதிவாசிகள் மகிழ்ச்சி

இதைத் தொடர்ந்து, சாலை அமைக்கும் பணியை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நேற்று துவக்கி வைத்தார்.கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் செல்வக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற உள்ளதால், அப்பகுதிவாசிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.நல்லம்பாக்கம் - கீரப்பாக்கம் சாலையில், வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 2 கி.மீ., நீளம் மற்றும் 7 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும், மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்,செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை