| ADDED : மார் 25, 2024 12:42 AM
சென்னை:தாமதமாக பில் கட்டினால் ரூ.500 அபராதம் வசூலிக்கும் நடைமுறையால் ஆவின் பாலகங்கள் நடத்துவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆவின் வாயிலாக பால் மட்டுமின்றி நெய், வெண்ணெய், இனிப்புகள், ஐஸ்கிரீம் உள்ளிட்ட 230க்கும் மேற்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஆவின் பாலகங்களில் மட்டுமின்றி சூப்பர் மார்க்கெட்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆவின் பாலகங்களை, சில்லறை விற்பனை நிலையம் என்ற பெயரில் நடத்துவதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் மட்டும் 4,000க்கும் மேற்பட்ட பாலகங்கள் இயங்கி வருகின்றன. விற்பனையகங்களுக்கான ஆவின் செயலில், முதல் நாள் மாலை 6:00 மணிக்குள் பொருட்களை முன்பதிவு செய்தால், அடுத்தநாள் பிற்பகல் 3:00 மணிக்குள் வந்து சேரும். சில நேரங்களில் அதிகாரிகளின் விருப்பத்தின்படி, கூடுதலாக பொருட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். பொருட்களை விற்பனைக்கு வாங்குவோர், அன்றே கட்டணத்தை செலுத்தாவிட்டால், அதற்கு அபராதமாக 500 ரூபாய் வசூலிக்கும் நடைமுறையை ஆவின் அறிமுகம் செய்து உள்ளது. பில் தொகையை ஒரேநாளில் செலுத்த முடியாதவர்கள், மீண்டும் பொருட்களை முன்பதிவு செய்ய முடியாத படி, மொபைல்போன் செயலி கணக்கு முடக்கப்படுகிறது. இதனால், ஆவின் பாலகங்கள் நடத்துவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.