சென்னை, வீடுகளுக்கு, 'பைப் லைன்' எனப்படும் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதற்கு, சாலைகளில் குழாய் வழித்தடம் அமைப்பதற்கான பல துறைகளின் அனுமதி, ஒற்றை சாளர முறையில் துரிதகதியில் வழங்க வினியோக நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்கவும், நாடு முழுதும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகிக்க, இந்தியன் ஆயில் நிறுவனம், எண்ணுார் துறைமுக வளாகத்தில், எல்.என்.ஜி., எனப்படும் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது.அங்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் எரிவாயு வருகிறது. இது, வாகனங்களுக்கு சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும், வீடுகளுக்கு, பி.என்.ஜி., அதாவது, 'பைப்டு' இயற்கை எரிவாயுவாகவும் வினியோகம் செய்யப்படுகிறது.தமிழகத்தில் வரும், 2030க்குள், 2.30 கோடி வீடுகளுக்கும், 2,785 சி.என்.ஜி., மையம் வாயிலாக வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்பட வேண்டும். இந்த பணிக்காக, 'சிட்டி காஸ் டிஸ்ட்ரிபியூஷன்' எனப்படும் ஏழு காஸ் வினியோக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு நிறுவனமும், மூன்று - நான்கு மாவட்டங்களில், அதற்கான பணிகளை மேற்கொள்கின்றன. இந்நிறுவனங்கள் மாநிலம் முழுதும் இயற்கை எரிவாயு வினியோகிக்க, 27,563 கி.மீ., குழாய் வழித்தடம் அமைக்க வேண்டும். இதற்காக, சாலையில் பள்ளம் தோண்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலை துறை என, பல துறைகளிடம் அனுமதி பெற வேண்டி உள்ளது. இது தாமதமாகிறது. எனவே, ஒற்றை சாளர முறையில் விரைந்து அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு, காஸ் வினியோக நிறுவனங்களிடம் எழுந்துள்ளது.இதுகுறித்து, 'ஏ.ஜி., அண்டு பி பிரதாம்' நிறுவன மண்டல தலைமை அதிகாரி திருக்குமரன் கூறியதாவது:வீடுகளுக்கு பைப் லைனில் எரிவாயு வினியோகம் தொடர்பாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், பலரும் தொடர்பு கொண்டு இணைப்பு வழங்க முன்பதிவு செய்கின்றனர்.சாலையில் குழாய் பதிக்க, பல துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். மெட்ரோ ரயில் உள்ளிட்ட கட்டுமான பணி நடப்பதால், சில இடங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை நள்ளிரவில் மேற்கொள்ள வேண்உள்ளது. குழாய் பதிக்கும் பணிக்கு பல துறைகளிடம் தனித்தனியே அனுமதி பெற வேண்டி இருப்பதால், தாமதம் ஏற்படுகிறது.இதனால், குழாய் பதிக்கும் பணிகளும் தாமதமாகின்றன. எனவே, இப்பணிகளுக்கு பல துறைகளின் அனுமதி, ஒற்றை சாளர முறையில் துரிதகதியில் வழங்கப்பட வேண்டும். குழாய் பதிக்கப்பட்டுள்ள இடங்களில், காஸ் வினியோக நிறுவனங்களின் தொலைபேசி எண் இடம்பெற்றுள்ள, விளம்பர பலகை வைக்கப்பட்டு உள்ளன. தொலைதொடர்பு உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பணிக்காக காஸ் நிறுவனங்களை தொடர்பு கொள்ளாமல் பள்ளம் தோண்டுவதால், குழாய் வழித்தடம் சேதமாகிறது.இதனால், எரிவாயு வினியோகம் செய்வது தடைபடுகிறது. அந்நிறுவனங்களுக்கு அரசு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஓ.எம்.ஆரில் ஆர்வம்
40,000 பேர் முன்பதிவுசெங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில், இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணியை 'ஏ.ஜி., அண்டு பி பிரதாம்' நிறுவனம் மேற்கொள்கிறது. சென்னையில் பெருங்குடியில் இருந்து கேளம்பாக்கம், நாவலுார், திருப்போரூரை உள்ளடக்கிய ஓ.எம்.ஆர்., சாலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம். அவற்றில் இதுவரை, 40,000 வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் எரிவாயு வினியோகம் கேட்டு முன்பதிவு செய்துள்ளனர்.அதில், 5,000 வீடுகளுக்கு எரிவாயு வினியோகம் செய்யப்படும் நிலையில், மற்றவற்றுக்கும் வினியோகம் துவங்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது.