சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் தாலுகா, கடந்த 2009ம் ஆண்டு துவங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த இந்த தாலுகா, 2018ம் ஆண்டு, சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.தற்போது, மாவட்டத்தில் அதிக பரப்பு கொண்ட தாலுகாவாக உள்ளது. இங்கு, 18 வருவாய் கிராமங்கள் உள்ளன. தாலுகா அலுவலகம், ஓ.எம்.ஆர்., குமரன்நகர் சந்திப்பில், 40,000 ரூபாய் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது.கடந்த, 2011ம் ஆண்டு சோழிங்கநல்லுாரில் இடமும், 2012ம் ஆண்டு கட்டடம் கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டது. இதற்கு சோழிங்கநல்லுார், கே.கே., சாலையில் ௧ ஏக்கர் தரிசு நிலம் தேர்வானது. அதில் அலுவலகம் கட்டும் வகையில், நிலப்பரப்பு இல்லாததால், அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், ஓ.எம்.ஆர்., கந்தன்சாவடி அருகில் 2.50 ஏக்கர் இடம் உள்ளது. இதில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. இந்த இடத்தில் ஒரு பகுதியில், சோழிங்கநல்லுார் தாலுகா அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.அலுவலகத்தை, மெட்ரோ ரயில் நிர்வாகம் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது. இதனால், பல ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது.சோழிங்கநல்லுாரில் இருந்து ஒரு பகுதியை பிடித்து, பள்ளிக்கரணை தாலுகா உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. இந்த அலுவலகத்திற்காக, இப்போதே இடம் தேர்வு செய்துள்ளனர்.