| ADDED : ஆக 20, 2024 12:34 AM
கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில் வளாகத்தில், கோவில் அறக்கட்டளை ஆதரவில் ராஜரத்தினம் மருத்துவம் மற்றும் கல்வி பவுண்டேஷன் சார்பில், கோவில் வளாகத்தில் இலவச பொது மருத்துவமனை நேற்று திறக்கப்பட்டது.பவுண்டேஷனின் அறங்காவலரும், 'லைப் லைன்' மருத்துவமனை தலைவருமான டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமார் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட மருத்துவமனையை, தொழிலதிபர் முத்துகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார்.பின் டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமார் பேசியதாவது:'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என, திருமூலர் கூறியிருக்கிறார். கோவிலாக கருதப்படும் உடலைப் பொறுத்தவரை ஆரோக்கியம் மிக முக்கியம். உலகில் எந்த கோவிலுக்கு சென்றாலும் இலவச மருத்துவமனை வசதி கிடையாது. கோவில் வளாகத்தில் இலவச மருத்துவமனை திறந்தால், பக்தர்கள் மட்டுமின்றி பல தரப்பினரும் பயன் பெறுவர் என நினைத்தோம். கோவில் நிர்வாகத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.இங்கு, பொது மருத்துவம் மட்டும் பார்க்காமல் அனைத்து வகையான சிகிச்சையும் அளிக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம். அதேபோல அலோபதி மருத்துவத்தில் பலருக்கு ஈடுபாடு இருக்காது. அதற்காவே ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை உட்பட 'ஆயுஷ்' மருத்துவமும் அளிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.மருத்துவமனையில் மத வேறுபாடின்றி இலவசமாக அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.