சென்னை, மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கத்தில், செட்டிமேடு, பொன் நகர், தனலட்சுமி நகர், தியாகி விஸ்வநாததாஸ் நகர், செல்லியம்மன் நகர், சாமுவேல் நகர், கன்னியம்மன் நகர், மஹாலட்சுமி நகர், சொர்ணாம்பிகை நகர், சுயம்புலிங்கம் நகர் உள்ளிட்ட இடங்களில், குடியிருப்பு பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், கிடங்குகள் உள்ளன. மேலும், பல புது கட்டுமானங்கள் உருவாகின்றன.அவற்றில் பிளாஸ்டிக், ரப்பர் மறு சுழற்சி மற்றும் கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் 'ஆசிட்' உள்ளிட்ட பல்வேறு ரசாயனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. புற்றுநோய் அபாயம்
அவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், எந்தவித பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் திறந்தவெளி காலி மனைகளில் விடப்படுகின்றன. இதனால், ரசாயனங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், தொற்று நோய்கள் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல், தொழிற்சாலை இயந்திர சத்தம், கழிவு நீர், பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகள் எரிப்பால் உருவாகும் அடர்த்தியான புகை உள்ளிட்ட பிரச்னைகளால், சுகாதாரசீர்கேடுகளில் சிக்கி அவதிப்படுகின்றனர். மேலும், புது கட்டடங்கள் கட்ட ஏராளமான நிலத்தடி நீர், மின் மோட்டார்கள் வாயிலாக உறிஞ்சப்படுகிறது. இதுபோன்ற ஏராளமான முறைகேடுகளுக்கு மத்தியில், புதிய தொழிற்சாலை மற்றும் கிடங்குகளுக்கான கட்டடங்கள், நகர்ப்புற மேம்பாடு, சி.எம்.டி.ஏ., அனுமதியின்றி அசுர வேகத்தில் முளைத்து வருகின்றன.மாநகராட்சி அதிகாரிகளின் 'ஆசி'யால் உருவாகும் இந்த கட்டடங்களால், மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். இது குறித்து பகுதிவாசிகள் புகார் செய்தால், புகார்களை சரிக்கட்டி அதன் மூலம் 'தனி வருவாய்' ஈட்ட கட்டட உரிமையாளர்களுக்கு, அதிகாரிகளால் 'சம்பிரதாய' எச்சரிக்கை கடிதம் அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வலுத்து உள்ளது. இதனால், மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ.,விற்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. 250 தொழிற்சாலை
கடந்த 3ம் தேதி, வடபெரும்பாக்கம் அருகே நடந்த ஆய்வுக்கூட்டத்தில், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பேசுகையில், ''வடபெரும்பாக்கம் சுற்றுவட்டாரத்தில், அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் மெத்தனால் உள்ளிட்ட ரசாயன மூலப்பொருட்களை பயன்படுத்தும், 250 தொழிற்சாலைகள், கிடங்குகளின் செயல்பாடுகளை போலீசார் தீவிரமாக கண்காணிப்பதாக தெரிவித்திருந்தார்,'' என்பது குறிப்பிடத்தக்கது.வடபெரும்பாக்கம் மாநகராட்சி அதிகாரிகளால் தொழிற்பேட்டையாக மாறி வருகிறது. இதனால், நாங்கள் சுகாதார சீர்கேடிற்கு ஆளாகி, நிம்மதி இழக்கிறோம். அடிக்கடி தீ விபத்துகளும் ஏற்படுகின்றன. அத்தியாவசிய தேவையான குடிநீர் ஆதாரம் குறைந்து, மாசடைந்து வருகிறது. மாநகராட்சி கமிஷனர், மேயர் நேரடி ஆய்வு செய்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முறைகேடான கட்டுமானங்களை தடுக்க வேண்டும்.- பொதுமக்கள், வடபெரும்பாக்கம்