சென்னை, சென்னை மாநகரின் எல்லை விரிவடைந்துள்ள நிலையில், மின்சார ரயில்களின் சேவையும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.சென்னையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும், 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களில், தினமும் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.சென்னை ரயில் கோட்டத்தின் கீழ், மொத்தம் 160 ரயில் நிலையங்கள் உள்ளன. சென்னை சென்ட்ரல் மற்றும் பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு, வில்லிவாக்கம், ஆவடி, அம்பத்துார், திருவள்ளூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது.ஆனால், போதிய அளவில் ஏ.டி.எம்., வசதி இல்லாததால், பயணியர் அவசரத்திற்கு பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.இது குறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் சடகோபன் கூறியதாவது:பெரிய நகரங்களில் 2 கி.மீ., துாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு ஏ.டி.எம்., இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான ரயில் நிலையங்களில் ஏ.டி.எம்., வசதியே இல்லை.சென்ட்ரல், எழும்பூர் போன்ற ரயில் நிலையங்களில் உள்ள ஏ.டி.எம்.,களிலும், போதிய அளவில் பணம் இருப்பதில்லை. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர்.'டிஜிட்டல்' பணப்பரிமாற்றம் பயன்பாட்டில் இருந்தாலும், இன்னும் ஏ.டி.எம்.,களை நம்பியே பொதுமக்கள் உள்ளனர். எனவே, பயணியர் நெரிசல் மிக்க ரயில் நிலையங்கள் அருகில் ஏ.டி.எம்.,களை அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது,'அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்கள் மேம்பாட்டு பணியில் ஏ.டி.எம்., உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். இந்த திட்ட பணிகள் முடியும் போது, பயணியர் இந்த வசதியை பெற முடியும்' என்றனர்.